விஜய் டிவியில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் 16 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று நடிகர் ஆரி அர்ஜுனன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் அத்தனை நாட்கள் நேர்மையாகவும், விதிகளை முறைப்படி பின்தொடர்ந்தும் விளையாண்ட ஆரிக்கு இந்த ‘உரிய’ வெற்றி கிடைத்ததாக அவருடைய ரசிகர்கள் கொண்டாடினர். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர். இதனையடுத்து அவருக்கு படவாய்ப்புகளும் அடுத்தடுத்து குவிந்தன.
குறிப்பாக முதல்முறையாக காக்கி சட்டை அணிந்தபடி ஒரு போலீஸ் ஸ்டோரியில் ஆரி நடிக்கும் திரைப்படம் தொடர்பான தகவலும் வெளியானது. ஏற்கனவே ஆரி நடித்து இருந்த அலேகா, பகவான் படங்கள் ஒருபுறம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னொருபுறம் ஆரி நடிப்பில், ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில்தான் ஆரி சர்ப்ரைஸாக பிக்பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத்தின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ஆரியும், தமது குடும்ப உறுப்பினர்களுடன் அனிதா சம்பத்தும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, அனிதா சம்பத் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அதில் “ஆரியுடன் குடும்பத்தினர் நேரம் செலவிட்டோம்! வருகைக்கு நன்றி ஆரி. இந்த சகோதர பிணைப்பு எப்போதும் தொடரும் என்று நம்புகிறேன்!” என்று அனிதா தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும் அந்த படத்தில், “இடமிருந்து வலமாக- தமது உறவுக்காரர், அண்ணா, பெரியம்மா, தான்(அனிதா), ஆரி, அம்மா, பிரபா மற்றும் தம்பி” உள்ளிட்டோர் நிற்பதாகவும் விளக்கினார்.