நடிகை அமலா பால் ஆடை படத்துக்காக அங்கீகரிக்கப்பட்ட போது எமோஷனலாக பல விஷயங்களை பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் அமலா பால். இவர் நடித்த மைனா படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து விஜய், தனுஷ் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து அம்மா கணக்கு, ராட்சன் உள்ளிட்ட வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவந்த அமலா பால், கடந்த வருடம் ஆடை படத்தில் நடித்தார். ஆடை எதுவுமின்றி ஒற்றை ஆளாக ஒரு பில்டிங்க்குள் மாட்டிக்கொள்ளும் பெண்ணின் போராட்டத்தை மையமாக வைத்து உருவான இத்திரைப்படத்தில் அமலாவின் பாலின் நடிப்புக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.
இந்நிலையில் பிஹைன்ட்வுட்ஸ் கோல்ட் மெடல் அவார்ட் நிகழ்ச்சியில் அமலா பாலுக்கு ஆடை படத்துக்காக கோல்ட் மெடல் வழங்கப்பட்டது. நடிகை ஜோதிகா அவருக்கு மெடல் அனிவித்தார். இதையடுத்து அமலா பால் கூறியதாவது, 'இதுவரை நான் நடித்த படங்களுக்காக அவார்ட் வாங்கியிருக்கிறேன். அதற்கெல்லாம் நான் தகுதியா என தெரியவில்லை. ஆனால் இப்போது தான் முதல் முறையாக எனது நடிப்புக்காக அவார்ட் வாங்குவது போல் இருக்கிறது. வாழ்க்கையில் சில மேடு பள்ளங்களை சந்தித்தேன். அதன் பிறகு மனதுக்கு உண்மையாக உழைப்பதில் நிம்மதி ஏற்பட்டது. ஆடை படத்தில் ஹீரோயின் மட்டுமே இருந்ததை பார்த்தீர்கள், ஆனால் அதில் நிறைய ஹீரோக்கள் இருக்கிறார்கள். முதல் ஹீரோ எனது அப்பா தான். ஆடை படத்தில் நடிக்கும் போது நிறைய பயம் இருந்தது. அப்பா தான் தைரியம் கொடுத்தார். கல்லால அடிப்பாங்க, திட்டுவாங்க, ஆனா அதை எல்லாம் தாண்டி, ஒரு நடிகன் அவன் வேலையில் நூறு சதவீதம் கொடுக்க வேண்டும் என்று அப்பா நம்பிக்கை கொடுத்தார். மேலும் இயக்குநர் ரத்ண குமார், ஒளிப்பதிவாளர் கார்த்திக், தயாரிப்பாளர் சுப்பு மற்றும் இந்த படம் வெளிவர காரணமாக இருந்து அனைவருக்கும் எனது நன்றி. தொடர்ந்து இது போன்ற அங்கீகாரத்துக்காக நான் உழைப்பேன்' என அவர் தெரிவித்துள்ளார்.