விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 2018ல் உருவாகி வெளியான திரைப்படம் 96. உருக்கமான காலம் கடந்த காதலை கண்ணியத்துடன் நடந்துகொள்ளும் கதாபாத்திரங்கள் வழியே இயக்கியிருப்பார் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிரேம்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷாவுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பகவதி பெருமாள், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதேபோல் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக மெல்லிய இனம் புரியாத உணர்வு அவர் மேல் தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் தான் தனது இன்ஸ்டாகிராமில் 'என்னிடம் எதையும் கேளுங்கள்' எனும் விரைவான கேள்வி பதில் செஷன் ஒன்றில், தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவர்களில் ஒருவர், “நான் 96-ஐ பார்த்தபோது, க்ளைமேக்ஸில் நீங்கள் விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்வீர்கள் என்று நினைத்தேன் ... ஆனால் ...". அப்படி நடந்திருந்தால்? ” என கேள்வி கேட்டார்:
இதற்கு வர்ஷா விஜய் சேதுபதியுடனாத தனது ஒரு காட்சியின் புகைப்படத்தை பதிவிட்டு, “ஹே, நீங்கள் மட்டும் அல்ல. நிறைய பேர் என்னிடம் இந்த கேள்வியைக் கேட்கிறார்கள். 96 கதை எப்படி முடிந்ததோ அந்த விதத்தில் தான் அது 96” என்றார். இதே போல் தளபதி விஜய் நடித்த கில்லி திரைப்படம் தான் தமக்கு பிடித்தமான திரைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2020-ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'மிடில் கிளாஸ் மெலடிஸ்' படத்தில் வர்ஷா பொல்லம்மா நடித்திருந்தார். அதற்கு முந்தைய வருடமான 2019-ல் தளபதி விஜய்-யின் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான 'பிகில்' திரைப்படத்திலேயே வர்ஷா தம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.