தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
காதல், நட்பு, உறவு, குடும்பம் என சகலத்தையும் ஃபீல் குட் டிராமா படமாக ரசிகர்களைக் கவர்ந்துள்ள இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகிகளாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர்.
படத்தில் நாயகன் திருச்சிற்றம்பலத்தின் தோழியாக ஷோபனா எனும் கேரக்டரில் அறிமுகமாகிறார் நித்யா மேனன். ஆனால் ஷோபனா திருச்சிற்றம்பலத்தின் வாழ்வில் இரண்டற கலந்தவளாகவே இருக்கிறாள். திருச்சிற்றம்பலத்தின் வாழ்க்கையில் வந்து போகும் மற்ற பெண்கள் போல் அல்லாமல், ஷோபனா அவனது வாழ்வெங்கும் நிறைந்திருக்கிறாள்.
ஆனால் தம்முடைய விருப்பு, வெறுப்பு அனைத்தையும் தனக்குள்ளேயே மறைத்து வைத்துக் கொண்டு முழுக்க முழுக்க திருச்சிற்றம்பலத்தின் மகிழ்ச்சி விரும்பியாக மட்டுமே இருந்திருக்கிறாள். என்ன தான் திருச்சிற்றம்பலத்தின் மீது தனக்கு காதல் இருந்தாலும் தான் காதலிக்கும் திருச்சிற்றம்பலத்தின் காதலையும் சேர்த்து காதலிக்கிறாள். அதே சமயம் தோழியாகவும் அச்சு பிசகாமல் தனக்கான இடத்தை தன்னிகரில்லாத இடமாக மாற்றி வைத்திருக்கிறாள்.
இப்படி ஒரு ஃபீல் குட் டிராமா படமாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள திருச்சிற்றம்பலம் படம் வெளியாகும் இந்நேரத்தில் ரசிகர்கள் பலரும் தத்தமது காலகட்ட ஷோபனாக்களை நினைவு கூர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
இப்படி 90-களின் கிட்ஸ்களுக்கு ஒரு ஷோபனா இருக்கிறார் என்றால் அவர்தான் பிரியாத வரம் வேண்டும் ‘நித்தி’. இந்த கதாபாத்திரத்தை ஷாலினி ஏற்று நடித்திருப்பார். சஞ்சயாக பிரசாந்த் நடித்திருப்பார். பிரசாந்த் - ஷாலினி நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் நல்ல நண்பர்களாக இருக்கும் பிரசாந்த் மற்றும் ஷாலினி இருவரும் ஒரு பிரிவை சந்திக்கும் போதுதான் தங்களுக்குள் இருக்கும் உறவின் ஆழத்தை உணர்கின்றனர். அந்தப் பிரிவின்போது ஏற்படும் துயரத்தின் பெயர்தான் காதல் என்பதை அப்போது அறியும் நாயகன், தன் உயிர் தோழியாக இருக்கும் நாயகியிடம் காதலை சொல்லி, அந்த உறவை நிரந்தரமாக பிரிந்து விடக்கூடாது என்கிற தவிப்பு பிரியாத வரம் வேண்டும் திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும்.
இதேபோல் 80S மற்றும் 90S கிட்ஸ் பலரும் 2003- வாக்கில் இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் தேவயானி நடித்து வெளியான பிரபல சீரியலான கோலங்கள் சீரியலில் வரும் அபி மற்றும் தொல்காப்பியனின் நட்பை தங்களது காலகட்டத்தின் திருச்சிற்றம்பலம் - ஷோபனா நட்பாக நினைவு கூர்ந்து வருகின்றனர். ஆனால் இங்கு கடைசிவரை தொல்ஸ் மற்றும் அபி இருவரும் நண்பர்களாகவே இருப்பார்கள். அந்த நட்புக்குள் இருக்கும் தார்மீகம் என்றுமே குறைந்ததில்லை.
தம்முடைய தோழி அபி குடும்ப அமைப்புக்குள் இருந்தாலும் அவருடைய தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலுக்கு பின்னிருந்து உறுதுணையாக தொல்ஸ் இருந்திருக்கிறார். பல நேரங்களில் தோழிக்காக, பல அவமானங்களை தாங்கிக்கொண்ட தொல்ஸ் அபியிடம் பேசாமல் போகும் சூழ்நிலை வந்தாலும் கூட அபியை வெறுத்ததில்லை. அபியும் அப்படித்தான் .. தன்னிடமிருந்து சில காரணங்களுக்காக விலகிச் செல்லும் தொல்ஸ் குறித்து ஒருபோதும் தவறாக நினைத்ததில்லை.
மரியாதையையும் நம்பிக்கையையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தொல்ஸ் மீது அபி இழந்ததில்லை. தொல்ஸ் எனும் தன் நண்பன் தன் அருகில் இல்லை என்றாலும் கூட எப்போதும் தனக்காக இருக்கிறான், என்றும் வருவான் என்று சொல்லிக் கொண்டே இருக்கும் அபி, எந்த இடத்திலும் தொல்ஸை விட்டுக் கொடுத்ததில்லை.
இப்படி பல கால கட்டங்களில் நட்புகள் இருக்க, நட்பை மீறிய உறவின் ஆழம் கொண்ட இரு மனங்களையும், அந்த இரு மனங்களுக்குள் இருக்கும் காதலையும் இலகுவாக சொல்லி இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் பழைய நாஸ்டாலஜியாவை அசைபோட வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.