காதல் மன்னன் படத்தின் வெற்றிக்கு பிறகு, அமர்க்களம் திரைப்படம் தல அஜித் நடிப்பில் இயக்குனர் சரண் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள் வெளியானது.
இந்த படம் தான் தல அஜித் தனது காதல் மனைவி ஷாலினியுடன் இணைந்து நடித்த ஒரே திரைப்படமாகும். இந்த அமர்க்களம் திரைப்படம் தல அஜித்தின் 25 வது திரைப்படமாக உருவானது.
அமர்க்களம் படம் வெளிவந்து இன்றுடன் 22 வருடங்கள் ஆகிறது. தமிழ் சினிமாவில் வெளிவந்த Meta Cinema -க்களில் மிக முக்கியமான படம் அமர்க்களம். மிகச்சிறந்த படமும் கூட. அமர்க்களம் படத்தின் பல இடங்களில் ரசிகர்களுக்கும் திரைப்படத்திற்கும் இடையில் உள்ள 4th Wall உடைக்கப்பட்டு இருக்கும். 4th Wall பிரேக்கிங் என்பது ரசிகர்கள் படத்தோடு ஒன்றுவதற்கு பயன்படுத்தப்படும் உத்தி ஆகும்.
இந்த படத்தின் பல இடங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் Reference வைக்கப்பட்டு இருக்கும்
படத்தின் தொடக்கத்தில் அஜித் (வாசு) தூங்கி கொண்டு இருக்கும் பொழுது தரையில் இயக்குனர் பரதன் இயக்கத்தில் கமல் நடித்த தேவர் மகன் போஸ்டர் விரிக்கப்பட்டு இருக்கும்.
ரகுவரன் (துளசி) அறிமுகமாகும் காட்சியில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் திரைப்பட போஸ்டர் ஒட்டப்பட்டு நாயகன் திரைப்படம் ஸ்ரீநிவாஸா தியேட்டரில் ஓடும்.
ஷாலினி (மோகனா) அஜித் (வாசு) மீதான காதலை சொல்ல தியேட்டருக்கு வரும் பொழுது பின்னணியில் பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த நிழல் நிஜமாகிறது படத்தின் போஸ்டர் இருக்கும்.
அஜித்தும் (வாசு) , ரகுவரனும் (துளசி) நாசரை (பிர்லா போஸ்) பழிவாங்க திட்டமிடும் காட்சியில் ரகுவரனின் சிறை வாழ்வை குறிக்க, இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ஒரு கைதியின் டைரி பட போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும்
இறுதியாக காதலின் வலியை உணர அஜித் (வாசு) பார்க்கும் திரைப்படம் என்ன தெரியுமா? இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ஏக் துஜே கே லியே படத்தை தான்!
ஏக் துஜே கே லியே படத்தில் கமல்ஹாசனின் பெயர் என்ன தெரியுமா? வாசு!
அமர்க்களம் படத்தில் அஜித் கதாபாத்திரத்தின் பெயரும் வாசு தான்!
இயக்குனர் சரண் அவர்கள் கே. பாலசந்தரின் உதவியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார், பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தன. அமர்க்களம் திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. ஒளிப்பதிவாளர் A. வெங்கடேஷிற்கு இது முதல் படமாகும்.