கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் வெளியான படம் 'திரௌபதி'. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் ஜி, இந்த படத்தையும் இயக்கி இருந்தார். நாடகக் காதலை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தான் எங்கள் நோக்கம் என்று படக் குழுவினர் தரப்பில் கூறப்பட்டாலும், இப்படம் ஜாதி ரீதியான பிரிவினையை உருவாக்குகிறது என்று ஒரு தரப்பு படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இப்படி ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகளோடு தான் படம் வெளியானது. ஆனாலும் பலரும் எதிர்பார்க்காத வண்ணம் படத்திற்கு மக்கள் நடுவே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், தமிழ்நாடு முழுக்க இந்த படம் மொத்தம் 14.65 கோடியை வசூல் செய்துள்ளது. மிகக் குறைவான பொருட்செலவில் Crowd Funding முறையில் உருவான இந்தப் படம், இப்போது எட்டியிருக்கும் வசூல் பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் " 'திரௌபதி' என்ற கடவுள் பெயரைத் தலைப்பாக வைத்தது தான், பலருக்கும் என் மீது காழ்ப்புணர்ச்சி வரக் காரணம் என்று நினைக்கிறேன்... எனது அடுத்த படத்தின் தலைப்பும் ஒரு கடவுள் பெயர் தான்" என்று அதிரடியாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.