பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் இரங்கல் தெரிவித்தார்.
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். பொது மக்கள் பார்வைக்காக சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளஅவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், என்னுடைய நெருங்கிய நண்பர், சினிமாவையும் தாண்டி எங்களுக்குள் ஒரு ஆழமான நட்பு உள்ளது. தற்போதுள்ள சினிமா, அரசியல், சமூகம் மீது அதிருப்தியில் இருந்தார். வாழ்வில் எந்த சூழலிலும் தனது சுய மரியாதையை விட்டுக் கொடுத்ததில்லை என்றார்.
மேலும், எனக்குள் மற்றொரு ரஜினிகாந்த் இருப்பதை காட்டியவர். நடிப்பில் புது பரிமாணத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தவர் மகேந்திரன். தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும் என்றார்.
இயக்குநர் மகேந்திரன் இயக்கிய 12 திரைப்படங்களில் ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘கை கொடுக்கும் கை’ உள்ளிட்ட திரைப்படங்களில் ரஜினியை இயக்கியுள்ளார். இது தவிர ரஜினிகாந்த் நடித்த ‘காளி’ திரைப்படத்திற்கு வசனமும், ‘பேட்ட’ திரைப்படத்தில் அவருடனும் இயக்குநர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார்
இயக்குநர் மகேந்திரனின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த ரஜினிகாந்த், மகேந்திரனின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு என்று கூறினார்.