பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிப்பில் வெளியான 90ML திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90ML திரைப்படம் அடல்ட் காமெடி ஜானரில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது. நடிகர் சிம்பு இசையமைத்து, கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இப்படத்தில் பொம்மு லக்ஷ்மி, ஸ்ரீ கோபிகா, மோனிஷா ஆகியோர் ஓவியாவின் தோழிகளாக நடித்துள்ளனர்.
90ML முழுக்க மது, சிகரெட், ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்களால் இப்படம் கடும் சர்ச்சைக்கு உள்ளானதையடுத்து, சமூக வலைதளங்களில் இது குறித்த காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. இந்நிலையில், Behindwoods-ன் மாத்தியோசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன் 90ML திரைபப்டம் தொடர்பான தனது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.
அவர் பேசுகையில், சமுதாயத்தில் திரைப்படங்களின் தாக்கம் அதிகம் உள்ளது. அடல்ட் காமெடி என்ற பெயரில் திரைப்படம் முழுக்க இரட்டை அர்த்த வசனம், ஆபாச காட்சிகள், மது, சிகரெட் என காட்சிப்படுத்துவது இன்றைய இளைய சமூகத்தினரை திசை திருப்பும் விதமாக உள்ளது.
தவறான விஷயங்களை கொண்டாடுவது முறையல்ல. அப்படிப்பட்ட கலாச்சாரம் நமது நாட்டில் இல்லை என கூறினார். இப்படத்தில் ஒரு காட்சியில் லெஸ்பியன் பற்றிய விவாதத்தின் போது, ஒரு பெண் அதனை தவறான செய்கையால் காண்பிக்கிறார்.
இது போன்ற விஷயங்களை ஆண்களே செய்யக் கூடாது என பேசிக் கொண்டிருக்கும்போது, பெண்களுக்கு எதிராக பேசும் ஆணாதிக்கவாதி என்கின்றனர். பெண்களின் சுதந்திரம் என்பதை வேறு விதமாக கூறியிருக்கலாம், இருக்கும் அனைத்து தீய விஷயங்களையும் ஒரே படத்தில் கூறுவதை ஏற்க முடியாது என்றார்.
90ML படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை தான் எதிர்க்கிறேனே தவிர தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தையும், இயக்குநர் அனிதா உதீப், தயாரிப்பாளர் உதீப்புக்கும் எதிராக எதுவும் கூறவில்லை என்றார்.
ஒரு ஃபிலிம் மேக்கராக சமுதாயத்தின் நலன் கருதி திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நல்ல சினிமா நிச்சயம் கொண்டாடப்படும். ஆனால், இதுபோன்ற தவறான விஷயங்களை பரப்பும் சினிமாக்களை ஆதரிக்க முடியாது என தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.