பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக பேசிய நடிகர் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, தன்னை பற்றியும், பொதுமேடையில் பெண்களை பற்றியும் அவதூறாக பேசிய மூத்த நடிகர் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, பெண்களை அவமதிக்கும் விதமாக பேசியதுடன், நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.
நடிகர் ராதாரவியின் கருத்துக்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது தரப்பு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘பொதுவாக அறிக்கை ஏதும் நான் வெளியிடுவதில்லை. ஆனால், தற்போது வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். குறிப்பாக என்னை பற்றியும், பெண்களை பற்றியும் ஆபாசமாக பேசும் ஆண்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் நடிகர் ராதாரவியின் மோசமான பேச்சுக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மேலும், நடிகர் ராதாரவி போன்று பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் சிலருக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன், அவர்களை பெற்றெடுத்தவரும் ஒரு பெண் தான்.
மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும். திரைப்படத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போனதால் இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைகிறார். இத்தகைய ஆணாத்திக்கம் நிறைந்த பேச்சுக்கு ஆடியன்ஸில் சிலர் கைத்தட்டி ரசித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இப்படி கைத்தட்டும் ரசிகர்கள் உள்ளவரை பெண்கள் மீது ஆபாசமான கருத்துக்களை பரப்பும் ராதாரவி போன்ற பலர் அதனை தொடர்ந்து செய்துக் கொண்டு தான் இருப்பார்கள். பொது வெளியில் குறிப்பாக என்னை பற்றியும், பெண்கள் பற்றியும் அவதூறாக பேசிய நடிகர் ராதாரவிக்கு, இந்த அறிக்கை மூலம் எனது அழுத்தமான, காட்டமான எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுள் நல்ல திரைப்பட வாய்ப்புகளை எனக்கு அளித்திருக்கிறார். எனது நடிப்பை விரும்பும் ஏராளமான தமிழ் மக்கள் எனக்கு புகழ் சேர்த்திருக்கிறார்கள். என்னை பற்றி தவறாக எத்தனை செய்திகள் வந்தாலும், பேயாகவும், சீதாவாகவும், காதலியாகவும், மனைவியாகவும், தோழியாகவும், கடவுளாகவும் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன்.
இறுதியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒரு கேள்வி, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து முறையிட விசாகா கமிட்டி அமைக்கப்படுமா?
இந்த விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக, ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி. கடவுளின் ஆசி மற்றும் உங்களின் எல்லையற்ற அன்புடன் தற்போது மீண்டும் பணிக்கு திரும்புகிறேன் என நயன்தாரா தெரிவித்துள்ளார்.