நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர வேண்டும் என பிரபல இயக்குநர் சுசீந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் கூட்டணி முடிவு செய்வதிலும், தொகுதி பங்கீடுகளிலும், வேட்பாளர் அறிவிப்பிலும் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்தை நேரடியாக அரசியலில் களமிறங்கி மக்கள் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்துள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பானது.
இது குறித்த அவரது ட்வீட்டில், ‘40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இது தான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.... உங்களுக்காக காத்திருக்கும், பலகோடி மக்களில் நானும் ஒருவன்’ என இயக்குநர் சுசீந்திரன் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு திரையுலகில் இருந்து அடுத்து யார் தமிழக முதல்வராக தகுதியானவர் என்று பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டபோது, கமல்ஹாசன் மற்றும் அஜித்குமாரின் பெயரை சுசீந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடிகர் அஜித், தனக்கு அரசியல் ஆசை துளியும் கிடையாது என்று விளக்கியதோடு, தனது ரசிகர்களும் கல்வி, தொழில் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.