நடிகர் சிம்புவுக்கு எதிராக போராடிய யாரும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஏன் போராடவில்லை என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, தனிமையில் வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் மற்றும் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அந்த காமக் கொடூரர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி மனதை பதபதைக்கச் செய்தது. இச்சம்பவத்திற்கு பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து இயக்குநர் அமீர் Behindwoods-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ‘நடிகர் சிம்புவின் பீப் பாடலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய யாரும் ஏன் இந்த சம்பவத்திற்கு எதிராக போராடவில்லை. இது சமூக சீர்கேடு இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
இச்சம்பவம் பொள்ளாச்சியில் மட்டும் நடந்ததாக கருதவில்லை. தற்போதைய நவீன உலகில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. மீடூ குறித்து பெரிய விவாதமே நடந்தது, நிறைய பேர் மீடூ-வுக்கு குரல் கொடுத்தனர். ஏன் இந்த சம்பவம் மீடூ-வின் கீழ் வராதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
பெண்களை பொத்தி வளர்ப்பதுடன் ஆண்களுக்கு புத்திமதி சொல்லி வளர்ப்பது பெற்றோர்களின் முக்கிய கடமையாக கருதுகிறேன். சினிமாவில் நடிகைகள் செய்வதை பார்த்து டிக் டாக், மியூசிக்கலியில் ஆபாசமாக பதிவுகளை போடுவது, எந்த விதத்திலும் பெண்களுக்கு கண்ணியம் சேர்க்காது எனவும் அமீர் தெரிவித்துள்ளார்.