“கோபப்படாதீங்கம்மானு சொன்ன முதியவரை பஸ்சிலிருந்து தள்ளிவிட்ட பெண்”!.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண் ஒருவர் முதியவரைப் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டதில் முதியவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வசித்து வருபவர், கதேஷா பிஷப். 25 வயது பெண். இவர் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி பேருந்தில் பயணம் செய்ய தன் மகனுடன் ஏறியுள்ளார். அப்போது அவர் முண்டியடித்துக்கொண்டு ஏறியது மட்டுமல்லாது, எதிரே இறங்கிக்கொண்ட பயணிகளிடம் கோபமாக பேசியதாகத் கூறப்படுகிறது.
இந்நிலையில், பேருந்தில் இருந்த 74 வயது முதியவர் ஒருவர், அந்த பெண்ணிடம் அமைதியாக அன்பாகப் பேசுங்கள் என அறிவுரை கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து ஆத்திரத்துடன் பேசிய அந்தப் பெண், கையில் பொருள்களுடன் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற அந்த முதியவரை ஆவேசமாகத் தனது இரு கைகளாலும் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதையடுத்து, அவருக்குத் தலையில் காயம் ஏற்படுகிறது. ஆனாலும் அந்த பெண் தொடர்ந்து ஆவேசமாகப் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில், இந்த காட்சிகள் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், அதில் மைக் இல்லாததால் அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் செர்ஜி ஃபார்னியர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஏப்ரல் மாதம் 23 -ம் தேதி பலியாகியுள்ளார். இதையடுத்து, இது தொடர்பான வழக்கில் கதேஷா பிஷப் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் கொலை வழக்கை சந்தித்து வருகிறார்.
மேலும், இது தொடர்பான விசாரணை இம்மாதம் தொடங்கவுள்ள நிலையில், போலீஸார் நேற்று இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றபோது பேருந்தில் பயணம் செய்த நபர்கள் யாராவது இருந்தால் நேரடி சாட்சி அளிக்க வருமாறு அந்நாட்டு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.