வேப்பந்தழை.. உப்பில் ஊறிய இறைச்சி.. கள்ள ஜெனரேட்டர்.. 6 நாள் பவர் கட்டிலும் உயிர்வாழும் மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்பெரும் அரசியல் குழப்பங்களும், பொருளாதார வீழ்ச்சியும் வெனிசுலாவில் உருவாக்கியுள்ள நெருக்கடியால் அந்நாடு தத்தளித்து வருகிறது.
தென் அமெரிக்காவின் முக்கியமான நாடு வெனிசுலா. எண்ணெய் வளம் உள்ளிட்ட எத்தனையோ வளங்கள் இருந்தும், அரசின் மிக மோசமான நிர்வாகத்தால் உண்டான பணவீக்கம் உச்சபட்ச துயரத்துக்கு அந்நாட்டை தள்ளிவிட்டிருக்கிறது எனலாம்.2010-ல் அப்போதைய வெனிசுலா அதிபர் சாவேஸ், அரசு மயமாக்கலை முன்னெடுத்ததில் தொடங்கி 2014-ஆம் ஆண்டு பணவீக்கம் பெரிய அளவில் உண்டானது வரை அத்தனையும் நடந்ததற்கு காரணம் தனியாரிடம் இருந்த நிறுவனங்களையும் சந்தை மற்றும் உற்பத்தி அதிகாரங்களையும் அரசு பிரதிநிதிகளிடம் ஒப்படைத்ததுதான் காரணம் என்று உலக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய அதிபருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்குமான முரண்பாட்டில், எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் தன்னை அதிபராக நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிபர் நிகோலஸ் மதுரோ, ஜூவானுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் உதவிகளை ஏற்க மறுத்தார். ஐ.நாவுக்கு விவகாரம் சென்றது. அதிபர் தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் ரஷ்யா மற்றும் சீனா தங்களின் வீட்டோ அதிகாரம் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் செய்துவிட்டன.
இந்த சூழலில்தான் கடந்த 6 நாட்கலாக அந்நாட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பேருந்து வசதிகள் முடங்கின. நோயாளிகள் பலர் மோசமான நிலையை அடைந்தனர். தலைநகரமே இருளில் மூழ்கியது. ஜெனரேட்டர்களும் உழைத்து ஓய்ந்தன. செல்போன் டார்ச் லைட்டுகளின் ஒளி அளவும் பேட்டரி குறைந்ததால் தீர்ந்தன. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தேபோனார். மேலும் டயாலஸிஸ் செய்ய முடியாததால், 10 பேர் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் மின் தேவைக்கென முக்கிய ஆதாரமாக இருந்த, கரி நீர்மின் திறன் அணையில் உண்டான கோளாறு இந்த தடைகளை உருவாக்கியதாக கூறப்பட்டாலும், மக்கள் குளிர்சாதனப்பெட்டி வேலை செய்யாததால் அவற்றில் இருந்த இன்சுலின்கள் கெட்டுபோய்விட்டதால், சர்க்கரை நோயாளிகள் பலர் வேப்பிலையை உண்ணச் செய்கின்றனர். மேலும் உப்புக்கல்லுக்குள் ஊறவைத்த இறைச்சிகளையும், முறையற்ற ஜெனரேட்டர் கனெக்ஷன்களையும் பயன்படுத்தி உயிர் வாழத் தொடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் எண்ணெய் வளம் கொழித்த லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவின் இந்த நிலைமை உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.