'பெரும்பாலும் இந்த வரிசையில தான் அறிகுறிகள் உண்டாகுது'... 'புதிய தகவலுடன் நம்பிக்கை தெரிவித்துள்ள ஆய்வாளர்கள்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள் எந்த வரிசையில் உண்டாகிறது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேளையில், வைரஸ் பாதிப்பை அறிகுறிகள் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வதும், சிகிச்சை எடுத்துக் கொள்வதும் மிகவும் அவசியமாகும். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகளையும், பிற அறிகுறிகளையும் பலரும் குழப்பிக்கொண்டு அச்சமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பெரும்பாலும் எந்த வரிசைப்படி அறிகுறிகள் உண்டாகிறது என கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் நடத்தியுள்ள ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலில் காய்ச்சல் வர வாய்ப்புள்ளதாகவும், அதைத் தொடர்ந்து இருமல், தசை வலி, குமட்டல் அல்லது வாந்தியோ, இரண்டும் சேர்ந்தோ வர வாய்ப்புள்ளதாகவும், அதன்பின்னர் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் மிகவும் சிலருக்கு மட்டும் முதல் அறிகுறியே வயிற்றுப்போக்காக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவில் பிப்ரவரி 16 முதல் 24ஆம் தேதி வரை கொரோனா உறுதியான 55,000 பேருக்கும், கடந்த டிசம்பர் 11 முதல் ஜனவரி 29 வரை பாதிப்பு உறுதியான 1100 பேருக்கும் ஏற்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வட அமெரிக்கா, ஐரோப்பாவில் 1994 முதல் 1998ஆம் ஆண்டு வரை 2470 பேருக்கு ஏற்பட்ட சாதாரண வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளை இதனுடன் ஒப்பிட்டே அறிகுறி வரிசைகளில் மாற்றம் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா அறிகுறிகள் இந்த வரிசையில் தான் இருக்கும் என முடிவுக்கு வந்துள்ள ஆய்வாளர்கள், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, விரைவான சிகிச்சையின் மூலம் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்