'லேட்டா பில் கட்டுனாலும்..’ .. அதிரடி வசதிகளால் ட்ரெண்டிங்கில் ஆப்பிள் கிரெடிட் கார்டு!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்தொழில்நுட்ப உலகின் முன்னோடிகளுள் ஒன்றாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் மொபைல் போன் உற்பத்தியிலும் சரி, அதற்கான மென்பொருள் வடிவமைப்புகளிலும் சரி, ஆண்ராய்டின் பத்து வருட உழைப்பையும் மிஞ்சி வெகுவேகத்தில் உயரே சென்று நின்றது.
மொபைல் போன் மற்றும் இயங்குதள அமைப்ப்புகளில் தனக்கென ஒரு தனித்துவத்தோடு விளங்கும் ஆப்பிள் போனுக்கான புதிய ஃபீச்சர்ஸ், அப்டேட்டுகள், புதிய செயலிகள், இயங்குமுறைகள் என எல்லாவற்றையும் உற்பத்தி செய்யவும், அவற்றின் பயன்பாடுகள் பற்றி நாளுக்கு நாள் ஆய்வு செய்யவுமே தனியாக ரிசர்ச் குழுக்களில் பணிபுரிவோர் இருக்கின்றனர்.
அந்த வகையில் மிக சமீபமாக குறிப்பிட்ட சில அப்டேட்டுகளுடன் ஆப்பிளின் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சி ஒன்று கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. இதில் பல விதமான புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஆப்பிள் கிரெடிட் கார்டு என்கிற புதிய வசதி ஆப்பிளின் தனித்துவமானதாகவும் மற்றும் அதே சமயம் கவனத்தை குவிக்கிற சிறப்பம்சமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பேசிய ஆப்பிளின் முதன்மை செயல் அலுவலர் டிம் குக், ஆப்பிள் கிரெடிட் கார்டின் மிக முக்கியமான அம்சமாக பலவற்றையும் குறிப்பிட்டார். அவற்றுள் முக்கியமானதாக கிரெடிட் கார்ட் கட்டணத்தை தாமதமாக செலுத்தினால் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை என்பதுதான். இந்த கார்டில் எவ்வித இலக்க எண்களும், சிவிவி நம்பரும் இராது என்றும் இந்த கார்டு மூலம் செய்யப்படும் பரிமாற்றங்களுக்கு 2% கேஷ்பேக் சலுகை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆப்பிள் பே உள்ள அனைத்து சேவைகளிலும் இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும், தனிநபர் தரவுகள் மீதான பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த கார்டின் மூலம் வாங்கப்படும் பொருள்கள் உள்ளிட்ட மற்ற விபரங்கள் சேகரிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கிரெடிட் கார்டின் சேவை விரைவில் இந்தியாவுக்கு வரும் என தெரிகிறது.