‘நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியுமா’தாயும், குழந்தைகளும் எடுத்த விபரீத முடிவு.. மனதை உருக்கும் கடிதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவர் திட்டியதற்காக குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயலா நகரில் 1 -வது குறுக்குத் தெருவில் வாடகை வீட்டில் செந்தாமரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிதா என்கிற மனைவியும், நாராயணன், மகாலட்சுமி என்கிற இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். செந்தாமரை அரும்பாக்கத்தில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்ப்யூட்டர் சென்டரில் வேலைபார்த்துக் கொண்டிருந்த செந்தாமரை தனது மனைவி அபிதாவுக்கு போன் செய்துள்ளார். நீண்ட நேரமாக அபிதா போனை எடுக்காததால் சந்தேகமடைந்த செந்தாமரை வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் தூக்கில் தொங்கிக்கொண்டிப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்த மூன்று பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வீட்டை சோதனையிட்டதில் அபிதா எழுதிய தற்கொலை கடிதம் ஒன்று போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதில், ‘எங்கள் மூன்று பேரின் மரணத்துக்கு யாரும் காரணமில்லை. நாங்களே இந்த முடிவை எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் இல்லாமல் இனிமேல் நீங்கள் யாரைத் திட்டுவீர்கள். நீங்கள் தனிமையில் இருந்தால்தான் எங்களோட அருமை உங்களுக்குத் தெரியும். உங்கள் தம்பி, அவரின் மனைவியை நம்பாதீர்கள். எங்களின் சாவுக்கு அவர்கள் வரக்கூடாது. நீங்கள் திட்டும்போதெல்லாம் எங்களுக்கு அவமாக இருக்கிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை அடுத்து கணவர் செந்தாமரையிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், செந்தாமரை மற்றும் அபிதாவுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செந்தாமரை அவரது மனைவி அபிதா மற்றும் குழந்தைகளை கடுமையாக திட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அபிதா தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் திட்டியதால் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.