‘நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிச்சாச்சு’: தீர்ப்புக்கு பின் முதல்வர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் நிர்வகித்து வரும் அதிமுக அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியதற்கு எதிராக தினகரன் மற்றும் சசிகலா தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

‘நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிச்சாச்சு’: தீர்ப்புக்கு பின் முதல்வர்!

இந்த வழக்கு விசாரணை நீண்ட நாள்கள் நடைபெற்ற நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் உண்மையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு தரப்படப்போகிறது? அதிமுக அணிக்கு ஒதுக்கப்படுமா என்கிற குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே அளிக்கக் கோரி மனுவை அளித்திருந்தனர். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவு சரிதான் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு வந்ததும் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மேடையிலேயே வைத்து அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். இதுபற்றி பேசிய முதல்வர், டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தாங்கள்தான் உண்மையான அதிமுக என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் தங்களது தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்ற அமர்வில் டி.டி.வி.தினகரன் தரப்பு முறையீடு செய்துள்ளது.