நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் களமிறங்கும் திரைப்பட இயக்குநர் கவுதமன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்ப் பேரரசு கட்சி சார்பாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் தூத்துக்குடி தொகுயில் போட்டியிடவுள்ளதாகவும், அதற்கான முழு அறிவிப்பையும் அறிக்கையினையும் இன்னும் 2 நாட்களில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வ.கவுதமன் சின்னத் திரையில் சந்தனக் காடு, வெள்ளித்திரையில் மகிழ்ச்சி உள்ளிட்ட படைப்புகளைக் கொடுத்தவர். சமூகப் போராட்டங்கள் பலவற்றிலும் கடந்த சில ஆண்டுகளாகவே வ.கவுதமனை இயல்பாகக் காண முடிந்தது.
தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குழுவுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாக ஐ.நா. சபையில் பேசி வருபவர்களுள் முக்கியமானவரன கவுதமன், ‘ஸ்டெர்லைட் ஆலையினை மூட வேண்டும் என வலியுறுத்தி 100 நாட்களுக்கும் மேல் 13 உயிர்களை சுட்டுக்கொன்ற ரத்தம் காய்வதற்குள் இந்த மக்கள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளனர்.
இந்த மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவது பற்றி, ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடிய குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக 23 வருடங்கள் போராடியுள்ளோம்’ என்று ஆதங்கப்பட்டார்.
மேலும் பேசியவர், ‘இங்கிருக்கும் 99 சதவீத கட்சிகள் இந்த ஆலைக்காரர்களிடம் பணம் வாங்கியிருக்கிறார்கள். தேர்தலுக்கு பிறகு இந்த ஆலையை திறக்கவும் வாய்ப்புள்ளது. ஆக, இந்த மண்ணைக் காக்க, இந்த மக்களைக் காக்க தமிழ்ப்பேரரசு கட்சி சார்பில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்குழுவினரின் ஆதரவோடு இங்கு போட்டியிடுவதற்கான ஆலோசனை முடிந்ததும் ஓரிரு நாட்களில் விபரங்களை அறிவிக்கிறேன்’ என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.