தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 2 மாநிலங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
இன்று (மார்ச் 01, 2019) தொடங்கி வரும் மார்ச் 19-ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல்முறையாக, ஒவ்வொரு பாடத்திற்கும் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. அதாவது நடப்பாண்டு முதல் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு +2 மாணாக்கர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 7,068 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 4,60,006 மாணவிகள் மற்றும் 4,01,101 மாணவர்கள் உட்பட மொத்தம் 8,87,992 மாணாக்கர்கள் 2,944 மையங்களில் (தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து) இந்த தேர்வினை எழுதுகின்றனர். புதுச்சேரியில் மட்டும் 150 பள்ளிகளில் 40 தேர்வு மையங்களில் 15,408 மாணாக்கர்கள் தேர்வெழுதுகின்றனர்.
இதைத் தவிர 45 சிறைக்கைதிகள், 26,883 தனித் தேர்வர்கள் பிளஸ் 2 தேர்வினை எதிர்கொள்கின்றனர். சுமார் 4000 பேர் கொண்ட பறக்கும் படை இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் தேர்வெழுதும் மாணவர்கள், தனித் தேர்வர்கள் என யாருக்கும் தேர்வறைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.