சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை - உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொலை வழக்கில் சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
சரவணபவன் உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்தவரின் மகளான ஜீவஜோதி நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர். இவரது கணவரான பிரின்ஸ் சாந்தகுமார், சரவணபவன் உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 2001-ம் ஆண்டு சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தில் விரும்பியதாகக் கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ராஜகோபால், சாந்தகுமாரை தனது ஆட்களுடன் கடத்திச் சென்று கொலை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது.
இதற்கிடையே, ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரின் உடல் கொடைக்கானலில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை பூவிருந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
மேலும் கடத்தல் வழக்கில் ராஜகோபாலுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதே சமயம் அரசு தரப்பில், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2009-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிப்பதாக அறிவித்திருந்தது.
இதனையடுத்து உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், ராஜகோபால் தெளிவான நோக்கத்துடன், பயங்கர குற்றத்தை இழைத்திருப்பதாகவும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது பெயிலில் இருக்கும் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால், ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.