"உங்களுக்கு ஒரு விருது தரோம்"... 'ஸ்கெட்ச் போட்டு சென்னை தொழிலதிபரை தூக்கிய கும்பல்'... 'கடைசியில் பெரிய டிவிஸ்ட் கொடுத்து'... 'ஓடவிட்ட போலீசார்!!!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் கொடைரோடு அருகே சென்னை தொழிலதிபர் ஒருவர் சினிமா பாணியில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான கணேஷ்குமார் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் நிலையில், அவருடைய மற்றொரு கிளை நிறுவனம் மதுரையில் உள்ளது. இந்த சூழலில் தொழிலில் பரபரப்பாக இருந்த கணேஷ்குமாரை பாராட்டி விருது வழங்க உள்ளதாகக் கூறி கொடைரோட்டில் உள்ள தனியார் மண்டபத்திற்கு வரவேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விழா குழுவினர் அவருக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த கொடை ரோட்டுக்கு விருது வாங்க கணேஷ்குமார் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு மர்ம கும்பல் கணேஷ்குமாரை கடத்திச் சென்றுள்ளது. அதன்பின்னர் விருது வாங்கச் சென்றவர் திரும்பி வராததால் அவருடைய நிறுவன ஊழியர்கள் இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வேலையில் கணேஷ் குமாரின் மதுரை நிறுவன அலுவலகத்திற்கு ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர், கணேஷ்குமார் கடத்தப்பட்டு தங்கள் பிடியில் இருப்பதாகவும், மதுரை அலுவலகத்திற்கு வரும் தங்கள் கூட்டாளிகள் இரண்டு பேரிடம் ரூபாய் 10 லட்சம் கொடுத்தால்தான் கணேஷ்குமாரை விடுவிக்க முடியும் எனவும், அப்படி செய்யவில்லை என்றால் அவரை கொலை செய்து விடுவோமெனவும் மிரட்டியுள்ளனர். தகவல் அறிந்த தனிப்படை போலீஸார் மிரட்டல் விடுத்த செல்போன் நம்பரை ஆய்வு செய்தபோது அது ஈரோட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கணேஷ்குமாரை பத்திரமாக உயிருடன் மீட்க நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் மதுரை ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு கடத்தல்காரர்களால் அனுப்பப்பட்ட இரண்டு இளைஞர்களிடம் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் ரூ 10 லட்சத்தை கொடுக்க வைத்துள்ளனர். அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஈரோட்டில் இருந்த கடத்தல்காரர்களுக்கு தகவல் கொடுத்ததும் அங்கிருந்து கணேஷ்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். கணேஷ்குமார் கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து வெளியே வந்துவிட்டார் என்பதை உறுதி செய்த போலீசார் பணத்தை வாங்கிக்கொண்டு மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் சிவகங்கை சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த இருவரையும் சினிமா பாணியில் துரத்திப் பிடித்துள்ளனர்.
அதன்பிறகு அவர்களிடமிருந்து பணத்தை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் சிவகங்கையை சேர்ந்த அஜித்குமார் மற்றும் காளையர் கோவிலை சேர்ந்த மருது மலர்மன்னன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் நிலக்கோட்டை நடுவர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி விருதுநகர் சிறையில் அடைத்துள்ளனர். ஈரோட்டிலிருந்து தப்பியோடிய கடத்தல் கும்பலையும் போலீசார் வலைவீசி தேடி வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்