உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தலைமையில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான ஆழ்வார்பேட்டையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது. முன்னதாக இந்த கட்சியில் தன்னை நகைச்சுவை நடிகை கோவை சரளா இணைத்துக்கொண்டார்.
அதன் பிறகு இந்த நிகழ்வில் பேசிய கமல்ஹாசன் ,‘இங்குள்ளவர்கள் எல்லாமே நான் அரசியல் பண்ண ஊக்கம் தந்தவர்கள். மக்கள் நீதி மய்யம் எனும் இந்த வீட்டில் எப்போதும் மதுரை ஆட்சிதான்’ என கூறியவர், தான் அறிவுரை கூறவில்லை, அதற்கு மாறாக தன் அநுபவத்தைக் கூறுவதாகக் கூறியுள்ளார். மேலும் இங்கு ஏழை, பணக்காரன் வித்தியாசம் அதிகமாகியதாகவும் வேதனை தெரிவித்தார். பெண்களைப் பொருத்தவரை அவர்கள் ஓட்டுநராக இருப்பது அவமானம் இல்லை. வீட்டு வேலை போல் அதுவும் ஒரு பணிதான். ஒழுக்கம் மற்றும் கல்வி இரண்டும் தாய் வழியில்தான் வரும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஆண்களை விட அனைத்திலும் அதிக விழுக்காடு பெறுவதற்கு பெண்கள் உரிமை பெற்றவர்கள். அவர்களின் உரிமை எவ்விதத்திலும் எவராலும் மறுக்கப்படக் கூடாது என்றும் அவர் இந்த நன்னாளில் பேசியுள்ளார்.
வறுமை கோட்டிற்கு கீழ் 60 லட்சம் குடும்பங்கள் இருப்பதற்கு யார் காரணம் என்று கேட்டவர், பொங்கலுக்கு சிறப்பு பரிசு கொடுத்தால் மட்டும் ஏழ்மையை ஒழிக்க முடியுமா என்று பொங்கியெழுந்தார். ஒருநாள் விருந்து சாப்பிட்டுவிட்டு 365 நாள் பட்டினி கிடக்க முடியாது என ஓட்டுக்கு பணம் வாங்குவது பற்றி பேசிய கமல் நாம் சரியான நபர்களுக்கு வாக்களித்தால் நம் பணம் நமக்கு இரட்டிப்பாக நல்வழியில் வந்து சேரும். ஆனால் அரசியல்வாதிகளோ ஏழ்மையை சாகடிக்காமல் பார்த்துக்கொள்வார்கள். அதில்தான் அவர்களது வெற்றி இருக்கிறது என்று சாடினார்.
நாடாளுமன்றத்தில் தமிழரது குரல் ஒலிப்பதை அனைவரும் மரியாதையாக பார்க்க வேண்டும் என்று கூறிய கமல், தனக்குப் பிறகு தனது மகன், மகள், மைத்துனன் என்று தொடரும் வாரிசு அரசியல் இருக்காது என்றும் இருக்கக் கூடாது என்றும் பேசிய கமல், தமிழன் என்பது கூட ஒரு விலாசம்தான். ஆக அதனை வைத்து வாய்ப்பு கேட்பதும் வாரிசு அரசியல்தான், அதனால் தகுதியையும் திறமையையும் வைத்து வாய்ப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.