‘கட்சி கூட்டத்தில் காலி நாற்காலிகள்’.. புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேர்தல் கூட்டத்தில் காலியாக காணப்பட்ட நாற்காலிகளை புகைப்படம் எடுக்க முயற்சி செய்ததால் கைகலப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. உறுப்பினரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது தேர்தல் கூட்டத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் எழுந்து சென்றதால், நாற்காலிகள் காலியாக காணப்பட்டன.
இதனையடுத்து, பத்திரிக்கையாளர்கள் சிலர் காலியான நாற்காலிகளை புகைப்படம் எடுக்க முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அதனைப் பார்த்த தேர்தல் கட்சிக் கூட்டத்திலிருந்த சில பேர், போட்டோ எடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு இடையே கைகலப்பு மற்றும் சலசலப்பு வெகுநேரம் நீடித்தது. இதனையடுத்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வாக்கு சேகரிப்புக் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால் நாகர்கோவில் தேர்தல் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.