தண்ணீர் தேடி அலைந்த பெண் யானை ஒன்று பாறை மீது வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடுமையான வெயிலினால் தற்போது வறண்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதிக்குள் இருக்கும் நீர் ஆதாரங்களான குளம், குட்டை போன்றவைகள் நீரின்றி காணப்படுகிறது. அத்துடன் வனப்பகுதியில் இருக்கும் தாவரங்களும் கருகிய நிலையில் உள்ளது.
இதனால் வனவிலங்குகள் உணவு, நீர் இன்றி தவித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் வனவிலங்குள் தங்கள் உணவு, நீரைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வரத்தொடங்கியுள்ளன.
இதனை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி என்னும் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த காட்டுயானைகள் இடம்பெயர்ந்து பல்வேறு பகுதிக்கு சென்றுள்ளன. அதில், வயதான பெண்யானை ஒன்று கடந்த சில நாள்களாக உணவு, தண்ணீர் தேடி அலைந்துள்ளது.
கடும் வெயிலின் தாக்கத்தால் குமிட்டாபுரம் என்னுமிடத்தில் உணவு தேடி அலைந்த காட்டுயானை பாறையின் மீது மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்துள்ளது. இதனை அடுத்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் உயிரிழந்த காட்டுயானையின் உடலை மீட்டுள்ளனர். வனப்பகுதிக்குள் தற்காலிக தண்ணீர் தொட்டி அமைத்து வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.