“பொள்ளாச்சி பாலியல் கொடூரம்”.. ‘நீதி கேட்டு போராடிய மாணவர்கள்’.. கன்னத்தில் அறைந்து கலைந்து போக சொன்ன எஸ்.பி., பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரை போலிஸார் கன்னத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“பொள்ளாச்சி பாலியல் கொடூரம்”.. ‘நீதி கேட்டு போராடிய மாணவர்கள்’.. கன்னத்தில் அறைந்து கலைந்து போக சொன்ன எஸ்.பி., பரபரப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான சபரிநாதன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தக்குமார் ஆகிய நால்வர் மீதும் குண்டர் சட்டம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில், பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட செயலுக்காக தமிழக அரசு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரூ25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தைக் கண்டித்து புதுக்கோட்டை அரசுக் கலைக்கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாணவர் சங்க அமைப்பினர் சிலரும் கலந்துகொண்டனர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் சொல்லி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மாணவிகள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்துள்ளனர்.

இதனால் போலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இடத்திற்கு வந்த எஸ்.பி  மாணவர் சங்க நிர்வாகி ஒருவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. மேலும் போலிஸார் மாணவர்களை கைது செய்து வேனில் ஏற்ற முயன்றதால், மாணவிகள் வேனை மறித்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவர்களை போலிஸார் விடுவித்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

POLLACHISEXUALABUSE, POLLACHICASE, STUDENTS, PROTESTS, POLICE