‘அம்மாவை கட்டிபிடுச்சு அழனும் போல இருந்தது’.. பொள்ளாச்சி சம்பவம் குறித்த கோவை பெண்ணின் உணர்வுப்பூர்வமான பேஸ்புக் பதிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 100 -க்கும் அதிகமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்த சம்பவம் தமிழத்தை உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ காட்சியில் வரும் பெண்ணின் கதறல் காண்போரை பதற வைத்தது.
இந்நிலையில் கோவையைச் சேர்ந்த நர்மதா மூர்த்தி என்னும் இளம்பெண் தனது பேஸ்புக் கணக்கில் பொள்ளாச்சி பாலியல் தொடர்பாக எழுதியுள்ள உணர்வுப்பூர்வமான பதிவு பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அவர் எழுதிய பதிவில்,‘கோயம்பத்தூரை சேர்ந்த நான், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவத்துக்கு பிறகு, வழக்கமாக வீட்டில் இருந்து வரும் போன்காலில் பத்தரமா இருந்துக்கோமா, ஆண் நண்பர்களோடு வெளிய போகதே, இதுபோன்ற அறிவுரைகள் வரும் என எதிர் பார்த்தேன்’.
ஆனால் எனக்கு போன் செய்த எனது அம்மா, ‘எனக்கு தெரியும் நீ தைரியமானவள் என்று. என்ன நடந்தாலும் அம்மாவும், அப்பாவும் உன் கூடவே இருப்போம். எதாவது போட்டோவே அல்லது வீடியோ வைத்து உன்னை மிரட்டினால் அதைக் கண்டுப் பயப்படாதே. இதை நாம் தைரியமாக எதிர்கொள்வோம். ஏனெனில், இந்த உலகத்திலுள்ள எல்லா பெண்களுக்கும் இருப்பதுபோன்ற வெறும் உடல்தான் இது. இதற்காக வெட்கப்பட ஏதுமில்லை. எது நடந்தாலும் ஒரு பெற்றோராய் எப்போதும் உன் கூடவே இருப்போம்’.
‘என் அம்மா சொன்ன இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழவேண்டும் என தோன்றியது. என்ன நடந்தாலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். பெற்றோரைவிட வலிமையான ஒன்று இருந்துவிடமுடியாது’.
கோவை பெண்ணின் உணர்வுப்பூர்வமான இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.