பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய திருப்பம்!

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கை உயர் பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக்கோரி பெண் வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பெண் வழக்கறிஞர்கள் அஜிதா, ஆதிலட்சுமி லோகமூர்த்தி, சுதா உள்ளிட்ட 6 பேர் தாக்கல் செய்த மனுவில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டதன் மூலம், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை பாதுகாக்கும் கடமையில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசின் இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்தினற்கும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாகவும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கை உயர் பெண் அதிகாரியை நியமித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும்,மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனைகள், மருத்துவ உதவிகள், சட்ட உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்  எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

POLLACHI INCIDENT, SEXUAL HARASSMENT