‘வாயைத் திறக்க வழியே இல்லை’.. ஏன்னா ‘நிபந்தனைகள்’ அப்படி.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மருத்துவக் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் படியாக செல்போனில் பேசியவர் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி.

‘வாயைத் திறக்க வழியே இல்லை’.. ஏன்னா ‘நிபந்தனைகள்’ அப்படி.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்!

செல்போனில் பேசியபோது, ரெக்கார்டு செய்யப்பட்ட அந்த ஆடியோக்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது வரை 331 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.  அவருடன் கைதான பலருக்கும் ஜாமின் கிடைத்துவிட்ட நிலையில் 11 மாதங்களாக ஜாமின் பெற முடியாமல் நிர்மலாதேவி இருந்துள்ளார்.

தொடர்ந்து நிர்மலாதேவி அவ்வாறு பேசியது யாருக்காக என்பது குறித்த சர்ச்சைகள் விவாதங்களாகின. அதன் உண்மைத் தன்மையை அறிய பல பத்திரிகை நிறுவனங்களும் போராடின. எனினும் நிர்மலாதேவி வழக்கு சிபிஐக்கு மாற்றக் கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி வழக்கு தொடர்ந்ததோடு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கவும் கோரியிருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவியின் தரப்பு வழக்கறிஞர், தன்னால் நிர்மலா தேவியை சந்திக்கவோ, அவருக்கு சட்ட உதவிகளை வழங்கவோ இயலவில்லை என தெரிவித்தார். அதனால் நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை விசாரிக்கும்படி கோரினார்.

அவரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று மதியம் 2.15 மணி அளவில் நிர்மலாதேவியை ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி ஆஜரான நிர்மலாதேவிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிர்மலாதேவி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது எனவும், தனி நபர்களை அவர் சந்திக்கக் கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

COLLEGESTUDENTS, NIRMALADEVI, PROFESSOR, MADURAIHIGHCOURT, BAIL