‘பரபரப்பான அரசியல் சூழலில்’, விஜயகாந்தை சந்தித்த ரஜினி.. ரஜினி சொல்லும் காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழ்தேமுதிக தலைவரான விஜயகாந்த் மிக அண்மையில்தான் அமெரிக்காவில் தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார்.
தற்போது முன்பை விட சற்று தெளிவாகவும் கூர்மையாகவும் காட்சியளிக்கும் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதை அவரது தொண்டர்களும் ரசிகர்களும் உளமாறக் கொண்டாடினர். விஜயகாந்த் தமிழகம் திரும்பிய அதே நாளில், சென்னைக்கு வந்து அதிமுகவுடன் கூட்டணி பங்கீட்டு விபரங்களை பேசி முடிவு செய்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் மரியாதை நிமித்தமாக விஜயகாந்தினை சந்தித்தார்.
தவிர, தேமுதிக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 17வது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனுக்கள் வரும் 24-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தேமுதிக கழக அலுவலகத்தில் வழங்கப்படவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தினை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ரஜினிகாந்த் இன்று சந்தித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தின் உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஜினிகாந்த், ‘எனது சிகிச்சை முடிந்த பின் நான் சிங்கப்பூரில் இருந்து வந்தபோது, என்னை முதல் ஆளாக வந்து சந்தித்தவர் விஜயகாந்த். அவர் சிகிச்சை பெற்று முடிந்த பின் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். அதனால் நான் அவரது உடல்நலத்தை விசாரிக்க வந்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். மேலும் இதில் துளி கூட அரசியல் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.