பாஜக வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமை வெளியிடும் முன், காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா பெயர்களை தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெ.ராஜா தேர்தல் பிரசாரத்துக்காக சிவகங்கைக்கு சென்றார்.அப்போது காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.
அதன்படி கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் மாநில தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜனும், சிவகங்கைக்கு எச்.ராஜாவும், ராமநாதபுரத்துக்கு முன்னாள் மாநில அமைச்சர் நயினர் நாகேந்திரனும், கோயமுத்தூருக்கு சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுவார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாஜக தலைமையிடம் இருந்து வராத நிலையில் எச்.ராஜா எப்படி வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார் என்ற கேள்வி எழுந்தது.இதனிடையே எச்.ராஜா அளித்த பேட்டியில் அவர் தெரிவித்த வேட்பாளர்கள் பட்டியல் என்பது உத்தேசமானது என தகவல்கள் வெளியாகின.