'காணாமல் போன ஒரு விமானி பாகிஸ்தான் வசம் இருப்பது பற்றி ஆய்வு செய்கிறோம்’!
முகப்பு > செய்திகள் > தமிழ்ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14 -ம் தேதி துணைநிலை ராணுவப்படை வீரர்கள் சென்ற பேருந்தின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 40 -க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதல் குறித்து இந்தியாவின் பலதரப்பட்ட துறைகளில் இருந்தும் பிரபலங்கள் தங்களது கண்டனத்தை பாகிஸ்தானின் மீது வெளிப்படுத்தினர்.
பின்னர் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக கூறப்பட்டது. இதனை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு எல்லைகளில் பதற்றம் நீடித்து வந்தது. இந்நிலையில் காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பால்கோட் பகுதியில் முகாமிட்டிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீது இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் இந்தியர்களால் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் காஷ்மீரின் போர் நிறுத்த ஒப்பந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் அங்குள்ள 4 பகுதிகளில் குண்டுவீசியதாகவும், ஆனால் இந்திய விமானங்கள் திருப்பி தாக்கியதாகவும் இந்திய ராணுவம் கூறியது. ஆனால் இந்திய விமானி கைது செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் புதிய தகவலை அதுதொடர்பான வீடியோவுடன் வெளியிட்டது. அந்த வீடியோவில் இருப்பவர் இந்திய துணை நிலை ராணுவத்தைச் சேர்ந்த அபிநந்தன் வர்த்தமன் என்பவர் என்று அறியப்பட்டுள்ளது. அவரையும் மேலும் ஒரு இந்திய ராணுவ வீரரையும் பாகிஸ்தான் தன் கஸ்டடியில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த, இந்திய அரசின் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியதாகவும், இன்று பாகிஸ்தான் விமானப்படை விமானம் அத்துமீறியபோது இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசியவர், ராணுவ நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக மிக்-21 போர் விமானம் ஒன்றை நாம் இழந்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். காணாமல்போன ஒரு இந்திய விமானி பாகிஸ்தான் வசம் இருப்பது பற்றிய விவகாரத்தில் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் 2 இந்திய ராணுவ வீரர்களை தன் கஸ்டடியில் வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இந்தியாவோ ஒருவர் மட்டுமே காணாமல் போனதாக உறுதி செய்துள்ளது. அந்த ஒருவர்தான் பாகிஸ்தானின் கஸ்டடியில் இருப்பதாக வெளியான வீடியோவில் இருக்கும் அபிநந்தன் என்றும் தெரிகிறது.
#WATCH Raveesh Kumar, MEA: One Pakistan Air Force fighter aircraft was shot down by Indian Air Force. In this engagement, we have lost one MiG 21. Pilot is missing in action. Pakistan claims he is in their custody. We are ascertaining the facts. pic.twitter.com/Bm0nVChuzF
— ANI (@ANI) February 27, 2019