'2021ல் கேப்டன் மாற்றமா???'... 'தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து'... 'CSK சிஇஓ சொன்ன முக்கிய தகவல்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணி குறித்து முக்கிய தகவல் ஒன்றை அணியின் சிஇஓ காசி விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் முறையாக இந்த முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இதுவரை நடந்த 12 ஐபிஎல் தொடரில் 10ல் விளையாடியுள்ள சிஎஸ்கே அந்த அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சென்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் இதுவரை சிஎஸ்கே விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சென்னை அணியில் வாட்சன், ஜாதவ், தோனி, சாவ்லா, சாகர், டு பிளசிஸ், ராயுடு என கிட்டத்தட்ட முக்கியமான வீரர்கள் எல்லோரும் மோசமாக சொதப்பி உள்ளனர். அதிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேஸ்ட்மேனாகவும், கேப்டனாகவும் சரியாக செயல்படவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையடுத்து அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்ந்து செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
முன்னதாக நடந்த போட்டிகளின் இறுதியில் தோனி தன் டிஷர்ட்டை மற்ற அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து பரிசளித்ததும் அந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அத்துடன் தோனி மீதும், வீரர்கள் மீதும் சிஎஸ்கே அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தொடர்ந்து தகவல் வெளிவந்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன், "2021 சீசனிலும் தோனிதான் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பார். தோனிதான் அணியை வழிநடத்துவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
சிஎஸ்கேவுக்காக 3 முறை ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்தவர் தோனி. முதல் முறை இப்போதுதான் நாங்கள் பிளே ஆப் வாய்ப்பை இழந்து இருக்கிறோம். இதுவரை இப்படி நடந்தது இல்லை. எந்த அணியும் இவ்வளவு சிறப்பாக ஆடியது கிடையாது. ஒரே ஒரு மோசமான சீசன் எதையும் மாற்றி விடாது. ஒரே ஒரு சீசனில் மோசமாக ஆடியதால் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த முறை நாங்கள் சரியாக ஆடவில்லை. வெல்ல வேண்டிய சில போட்டிகளில் தோல்வி அடைந்துவிட்டோம். அதுதான் எங்கள் பின்னடைவுக்கு காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்