'என்ன பங்கு அடுத்த இன்னிங்ஸ்க்கு போலாமா'?...உலகக்கோப்பையில் அதிரடி காட்ட போகும் இருவர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை, இன்றோடு முடிவதையடுத்து,ஆஸ்திரேலிய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற டேப்பைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. டிவி கேமராவிலும் தெளிவாகத் தெரிந்த இந்த விவகாரம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் தலைகுனிவாக அமைந்தது.இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பேன்கிராஃப்ட் தவறை ஒப்புக்கொண்டார்.
மேலும் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆதரவாகச் செயல்பட்டதாகவும் அடுத்தகட்ட விசாரணையில் தெரியவந்தது.வார்னர், ஸ்மித்துக்கு தலா ஒரு வருடமும் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற தொடரில் கோப்பையை இழந்தது.இதற்கு டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அணியில் இல்லாததே காரணம் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் கொந்தளித்தார்கள்.இதே நிலை நீடித்தால் உலகக்கோப்பையை வெல்வது மிகக்கடினம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தார்கள்.
மேலும் தடை காரணமாக கடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருவரையும் ஐபிஎல் நிர்வாகம் விளையாட அழைக்கவில்லை.இதனிடையே இந்த வருட ஐபிஎல் போட்டி யில் ஸ்மித்தும் வார்னரும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பேன்கிராஃப்ட்டின் தண்டனை காலம் ஏற்கனவே முடிந்த நிலையில், ஸ்மித், வார்னரின் தண்டனை காலம் இன்றோடு முடிகிறது.
இருவரின் தடை காலம் முடிவதை அடுத்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளார்கள்.இருவரும் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இணைவார்கள் என்பதால் உலகக்கோப்பை போட்டிகள் நிச்சயம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.