'முதல் முறையா இப்படி நடக்குது?!!'... 'சப்போர்ட்டுக்கு திரண்ட வெளிநாட்டு வீரர்களால்'... 'மேலும் அதிகரிக்கும் சிக்கல்???'... 'எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் தேர்வு செய்யப்படாதது குறித்து வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
இந்தியா ஆஸ்திரேலியா நடக்கவுள்ள கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் 2 நாட்களுக்கு முன் வெளியானது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யா குமார் யாதவ் இடம்பெறவில்லை என்பது தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் இறங்கி ஆடி வரும் வரும் வீரர் சூர்ய குமார் யாதவிற்கு தொடர்ந்து 3 வருடமாக சிறப்பாக ஆடியும் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இவர் மும்பை அணியின் வீரர் என்பதால் கோலி தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்து வருகிறார் எனவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணியில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கு தன் அதிரடி பேட்டிங் மூலம் சூர்ய குமார் யாதவ் பதிலடி கொடுத்தார். 43 பந்தில் 79 ரன்கள் எடுத்து அனைவரது பாராட்டுகளையும் அவர் பெற்று வரும் நிலையில், சாம் பில்லிங்ஸ் தொடங்கி பொல்லார்ட் வரை வெளிநாட்டு வீரர்கள் பலர் அவரைப் பாராட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக சூர்ய குமார் யாதவ் ஒரு சீரியஸான வீரர் என்று சாம் பில்லிங்ஸ் கூறியுள்ள நிலையில், அவருக்கு இந்தியாவின் சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் எனவும், நியூஸிலாந்திற்காக விளையாடலாம் எனவும் சூசகமாக ஸ்காட் ஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை என்ற வருத்தம் சூர்ய குமார் யாதவிற்கு உள்ளது என வெளிப்படையாகவே பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
அதேபோல மிட்சல் மெக்லான்கான் இந்தியாவின் 360 வீரர் சூர்ய குமார் யாதவ், சிறப்பான ஆட்டம் ஆடினார் எனவும், இப்படியே ஆடுங்கள், நீல உடையில் நன்றாக உள்ளீர்கள் எனவும் மறைமுகமாக அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இப்படி சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் சூர்ய குமார் யாதவிற்கு ஆதரவாக பேசி வருவது ஒரு வகையில் புதிய சிக்கலாக மாறியுள்ளது.
ஒரு வீரரை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என வெளிநாட்டு வீரர்கள் இந்தளவு ஆதரவு தெரிவிப்பது அவ்வளவு எளிதில் நடக்கும் விஷயமல்ல. முதல்முறையாக இப்படி பல வெளிநாட்டு வீரர்கள் ஆதரவு தெரிவிப்பது கோலிக்கும், தேர்வுக்குழுவிற்கும் அழுத்தத்தையே அதிகப்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்தாவது சூர்ய குமார் யாதவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுமா அல்லது இதே நிலையே தொடருமா என தற்போது ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மற்ற செய்திகள்