"இனிமேதான் இருக்கு செம 'டிவிஸ்ட்'...!!!" - Playoff-க்கு செல்ல... உச்சக்கட்ட மோதலில் அணிகள்... யாருக்கு வாய்ப்பு???
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் நடந்துவரும் அடுத்தடுத்த திருப்பங்களால் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டெல்லி மற்றும் மும்பை அணிகள் நடப்பு சீசனில் மிக முக்கிய அணிகளாக உருவெடுத்துள்ளன. இந்த 2 அணிகளும் அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளதால், இவை பிளே ஆப் செல்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. அத்துடன் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள பெங்களூர் 6 போட்டிகளில் வென்று புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளதால் இன்னும் 2 போட்டிகளில் வென்றால் பிளே ஆப் சென்றுவிடும்.
இதையடுத்து கொல்கத்தா அல்லது ஹைதாராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் 4வது இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய திருப்பமாக தொடரில் இந்த 2 அணிகளும் பின்னுக்கு செல்ல தொடங்கியுள்ளது. அதேநேரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் தற்போது அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வேகமாக முன்னேறி வருகிறது. அதிலும் புள்ளிகள் பட்டியலில் டாப் இடங்களில் இருக்கும் பெங்களூர், மும்பை, டெல்லி அணிகளை எல்லாம் பஞ்சாப் வரிசையாக வீழ்த்தி வருகிறது. இதனால் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கெயில் வந்த பின் அனைத்து போட்டியிலும் வென்றுள்ள பஞ்சாப் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 4ல் வென்றுள்ளது. இதைத்தொடர்ந்து மீதம் இருக்கும் 4 போட்டியிலும் வென்றால் பஞ்சாப் எளிதாக பிளே ஆப் செல்ல முடியும். இனி பஞ்சாப் அணி ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தானை எதிர்கொள்ள உள்ளதால், அடுத்தடுத்த போட்டிகளில் அந்த அணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.
முன்னதாக பஞ்சாப் அணிதான் ஐபிஎல் தொடரிலிருந்து முதலில் வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அணி பிளே ஆப் ரேஸில் வந்துள்ளது. ஆனால் முதல் போட்டியிலேயே மும்பையை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கிய சிஎஸ்கே புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. ஆனாலும் அடுத்து விளையாட உள்ள அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் நிலையும் அதற்கு சாதகமாக அமைந்தால் பிளே ஆப் செல்ல ஒரு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்