’எப்ப முடியும்னே தெரியல’.. பாதியில் நிற்கும் இந்தியா-பாகிஸ்தான் மணமக்களின் திருமணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுல்வாமா தாக்குதலில் துளிர்விட்ட இந்தியா- பாகிஸ்தான் எல்லைச் சண்டைகளால், பாகிஸ்தான் மணப்பெண்ணுடன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் தள்ளிப்போவதாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணமகன் மகேந்திர சிங் வேதனை தெரிவித்துள்ளதோடு, இந்தியா-பாகிஸ்தான் பதற்றங்கள் குறையும் வரை தன் திருமணத்துக்காக அவர் காத்திருக்கும் செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜேக்கா பார் பகுதியில் வசிக்கும் மகேந்திர சிங் என்பவருக்கும் பாகிஸ்தானில் உள்ள சினோய் பகுதியில் வசிக்கும் சாஹன் என்பவருக்கும் முன்னதாக திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஆனால் புல்வாமா தாக்குதல் தொடங்கி, தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதல், அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டதும் ஒப்படைக்கப்பட்டதும் என தற்போதுவரை இரு நாடுகளிடையே தொடர்ந்து எல்லைச் சண்டைகள் வலுத்து வருவதாலும் இன்னும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான பகைச் சீற்றம் தணியாத சூழல் உள்ளது.
தாக்குதல் நிகழ்ந்தவுடனேயே, பெண் வீட்டாரிடம் பேசி திருமணத்தை தள்ளி வைக்கக் கோரிய மணமகன் வீட்டார், தங்கள் உறவுக்காரர்களை பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்வதற்காக புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் மற்றும் விமான டிக்கெட்டுகளை கேன்சல் செய்துமுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள மணமகள் வீட்டாரும் இந்த சூழலைப் புரிந்துகொண்டு காத்திருப்பதாகத் தெரிகிறது.
ஆனாலும், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இன்னமும், தினமும் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கிச் சூடுகளும் தொடர்ந்தபடியே உள்ளதால், பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாத சூழல் நிலவுவதோடு, தன் திருமணம் தள்ளிப் போகிக்கொண்டே இருப்பதாக மகேந்திர சிங் வேதனை தெரிவித்துள்ளார். எனினும் இந்த சூழல் எல்லாம் தணிந்து, இருநாடுகளின் எல்லைச் சண்டைகள் ஓய்ந்து, தனக்கான சூழல் கனிந்து வரும் நேரம் உடனடியாக வரும் என்றும் கூடிய விரைவில் தனக்கு நிச்சயமான பெண்ணை கரம் பிடிக்கவுள்ளதாகவும் மகேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.