'ஹலோ மேடம்'... 'பேங்க் மேனேஜர் பேசுறேன் மா'...'முதலமைச்சர் மனைவியிடமே கைவரிசை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுதலமைச்சரின் மனைவியிடமே வங்கிக் கணக்கு விவரங்களை வாங்கி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்யின் மனைவி பிரனீத் கவுர். இவர் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா தொகுதியின் எம்.பியாக இருந்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அளித்த புகாரில் ''வங்கி மேலாளர் என்று கூறி மொபைல் மூலம் என்னை தொடர்பு கொண்ட நபர், என்னுடைய சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக வங்கிக் கணக்கு மற்றும் ஏ.டி.எம் கார்டு விவரங்களை சொல்லச் சொன்னார். நான், அதனை நம்பி என்னுடைய வங்கி கணக்கு விவரத்தை அவரிடம் தெரிவித்தேன்.
ஆனால் சிறிது நேரத்தில் என்னுடைய மொபைல் போனுக்கு வந்த குறுஞ்செய்தி என்னை அதிரச்செய்தது. அந்த குறுஞ்செய்தியில் என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 23 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது'' என தனது புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மொபைல் போன் அழைப்பை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது மோசடியில் ஈடுபட்ட நபர், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் மோடி செய்த நபரை கைது செய்தனர். முதலமைச்சர் மனைவியிடமே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.