ஒரே வருடத்தில் 70 லட்சம் பிரியாணிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய ஹைதராபாத்தின் பாரடைஸ் பிரியாணி உணவகம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது.
ஹைதரபாத்தில் 1953-ஆம் ஆண்டு சிறிய கபேவாக தொடங்கப்பட்ட பாரடைஸ் பிரியாணி கடை அடுத்த சில வருடங்களிலேயே தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத பிரியாணி உணவகச் சங்கிலியாக மாறியது. அதன் பின்னர் சென்னை, பெங்களூர், ஆந்திரா, தெலுங்கானாவில் தனித்துவமான தங்கள் பிரியாணி உணவகக் கிளைகளை நிறுவியது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி முதல், 2017-ஆம் ஆண்டு டிசம்பர் வரை தங்களது வாடிக்கையாளர்களுக்கு பாரடைஸ் உணவகம் வழங்கிய மொத்த பிரியாணியின் எண்ணிக்கை 70 லட்சத்து 44 ஆயிரத்து 289. இவ்வாறு பாரடைஸ் பிரியாணி ஹைதராபாத்தின் சிறந்த பிரியாணி என்பது மட்டுமல்லாமல் ஒரே வருடத்தில் 70 லட்சத்தைத் தாண்டி விற்கப்பட்டதால் புகழ் பெற்ற லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
மேலும் சிறந்த பிரியாணியை வழங்கும் உணவகமாகவும் கூடுதல் விருதினை பெறும் பாரடைஸ் உணவகத்தின் நிறுவனரான அலி ஹேமட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் பெறுகிறார். ஆசிய உணவு தரவாய்வுக் குழு அளித்த இந்த அங்கீகாரத்துக்கும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதால் உண்டான கவுவரத்துக்கும் தங்களது வாடிக்கையாளர்களின் மன திருப்தியும், முழு ஆதரவும்தான் காரணம் என பாரடைஸ் ஃபுட் கோர்ட்டின் முதன்மை அலுவலர் குப்தா தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஸிவிக்கி பிரியாணி பப்ளிக் சாய்ஸ் மற்றும் தெலுங்கானா மாநில உணவக அசோசியேஷன்ஸ் இணைந்து நடத்திய விருதுவிழாவில், ஹைதராபாத்தின் சிறந்த பிரியாணி உணவகமாக பாரடைஸ் பிரியாணி உணவகம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.