YSR காங்கிரஸில் அதிரடியாக இணைந்த நடிகர் மோகன் பாபு.. பரபரப்பாகும் அரசியல் களம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கு நடிகர் மோகன் பாபு அதிரடியாக ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.
ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக தன் மகன்களுடனும் தானும் களத்தில் இறங்கி 2 நாட்களுக்கும் மேலாக போராடிய நடிகர் மோகன் பாபுவுக்கு ஆந்திராவில் வசூல் மன்னர் என்றெல்லாம் புனைப்பெயர்கள் இருக்கின்றனர்.
மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி குரல் கொடுத்ததால் மோகன் பாபுவை அம்மாநில அரசு கவனிக்கத் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள் பலருக்கும் நலத்திட்ட அடிப்படையில் கிடைக்க வேண்டிய கல்வி உதவித் தொகைக்கான நிதியை அரசு செலுத்தாததைக் கண்டித்து பேரணி ஒன்றையும் மோகன் பாபு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
ஆனால், அந்த பேரணி நடப்பதற்குள் மோகன் பாபுவின் வீட்டிற்கு சென்ற போலீஸார் அவரை வீட்டுக்காவலில் வைத்தனர். இந்த நிலையில்தான், இன்று மிக அதிரடியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் மோகன் பாபு இணைந்துள்ளார். எனினும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் எல்லாம் முடிந்த நிலையில், மோகன் பாபு போட்டியிட மாட்டார் என்றும் அதே சமயம் அவர் அந்த கட்சிக்காக சித்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்வார் எனவும் தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல், அந்த கட்சி வெற்றி பெற்றால், மோகன் பாபு ராஜ்யசபா உறுப்பினராக அக்கட்சியினரால் பரிந்துரைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.