விஸ்வாசத்தைக் காட்ட பாம்பைக் கொன்று உயிரைவிட்ட ‘டைசன்’நாய்.. நெகிழ வைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது உரிமையாளரைக் காப்பற்றுவதற்காக பாம்புடன் சண்டையிட்டு நாய் ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
ஒடிசா, குர்டா மாவட்டத்தில் ஜாட்னி என்னும் பகுதியில் அமன் ஷரிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ‘டைசன்’ என்கிற நாயை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு டைசன் நாய் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. உடனே அமன் ஷரிப் வீட்டின் வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது டைசன் நாய் ஒரு பாம்பைக் கொன்றுவிட்டு அதன் அருகிலேயே மயக்க நிலையில் இருந்துள்ளது. உடனடியாக அமன் ஷரிப் கால்நடை மருத்துவமனைக்கு போன் செய்துள்ளார். ஆனால் இரவு நேரம் என்பதால் மருத்துவமனை மூடப்பட்டு இருந்துள்ளது. அந்த சமயம் தனியார் மருத்துவமனைகள் ஏதும் திறக்கப்படாததால் டைசன் நாய் மயங்கிய நிலையிலேயே உயிரிழந்துள்ளது.
இது பற்றி பேசிய அமன் ஷரிப், ‘இரவில் டைசன் குரைத்துக் கொண்டே இருந்தது. உடனே நாங்கள் வெளியே சென்று பார்த்தோம். வீட்டின் வாசலில் ஒரு பாம்பைக் கடித்து கொன்றுவிட்டு மயங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது. டைசைனின் உடம்பில் பாம்பு கடித்த காயங்கள் இருந்தன. கால்நடை மருத்துவமனைக்கு போன் செய்தும் பயனில்லை. அதற்குள் டைசன் அந்த இடத்திலேயே உயிரிழந்தது’ என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, மனிதர்களுக்குப் போலவே கால்நடை விலங்குகளுக்கும் 24 மணிநேரமும் இயங்கும் மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தன்னுடைய உரிமையாளரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு தன் உயிரைவிட்ட டைசன் நாயின் விஸ்வாசத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.