"வைரஸ் பரவ நாங்க ஒண்ணும் காரணமில்ல"... "சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காதீங்க"... உலக நாடுகளுக்கு வுஹான் ஆய்வகத்தின் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து நாடுகளையும் அதிகமாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், சீனாவின் வுஹான் மாகாணத்திலுள்ள ஆய்வகம் ஒன்றில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். அதே போல ஜெர்மனி உட்பட பல நாடுகளும் சீனா மீது கடும் கோபத்தில் இருந்தன.
இந்நிலையில், இதற்கு விளக்கமளிக்க கூடிய வீடியோ ஒன்றை சீனா வைராலஜி ஆய்வகம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஜாங் ஹௌஜுன் என்ற ஆராய்ச்சியாளர் அங்கு பணிபுரிபவர்கள் அணியும் இரண்டடுக்கு பாதுகாப்பு கவசம் பற்றியும், அதே போன்று அந்த ஆய்வகத்தின் மையப்பகுதி எப்படி காற்று கூட புகாமல் ஐந்தடுக்கு பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கிறது என்பதையும் தெளிவாக கூறியுள்ளார். அங்கு கசிவு ஏற்படுவதை தவிர்க்க காற்று உள்ளே வர மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதாகவும், உள்ளே இருந்து வெளியே காற்று செல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.
இந்த ஆய்வகத்திற்குள் வைரஸ்களைப் பாதுகாக்க ஓர் அறை உள்ளது. இந்த அறையில்தான் 1,500-க்கும் மேற்பட்ட கொடிய வைரஸ்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வைரஸ்களை பாதுகாத்து வைத்திருக்கும் குளிர் சாதன பெட்டகத்தின் புகைப்படம் சில மாதங்களுக்கு ட்விட்டர் பக்கம் ஒன்றில் வெளியாகியிருந்தது. இதனால் அங்கிருந்து வைரஸ் பரவியதாக குற்றச்சாட்டும் எழுந்தது. அமெரிக்க உளவுத்துறை வுஹான் ஆய்வகத்தில் விசாரணை நடத்தி வைரஸ் இங்கிருந்து பரவியதை என்பதை கண்டறிய வேண்டும் என தெரிவித்திருந்தது.
இதனை முற்றிலும் மறுத்த வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி நிறுவனத்தின் துணைத்தலைவர் Dr.யுவான் ஜிமிங் கூறுகையில், 'இந்த வைரஸ் எங்கள் ஆய்வகத்தில் இருந்து பரவ எந்த வாய்ப்பும் இல்லை. இந்த மாதிரியிலான கொடிய வைரஸை மனிதன் உருவாக்குவதற்கான சக்தி அவனிடம் இல்லை என்பதே உண்மை' என்கிறார்.