உலகின் உயரமான பெண்ணின் முதல் விமான பயணம்.. ஏறினதும் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் உயரமான பெண்ணான ருமேஸ்யா கெல்கி தனது வாழ்வில் முதன்முறையாக விமானத்தில் பயணித்திருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதிய பதிவு பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
பொதுவாக அதிக உயரம் கொண்டவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். முக்கியமாக போக்குவரத்தில் அவர்களால் தங்களுடைய உயரத்திற்கு ஏற்றபடியான இருக்கையை தேர்ந்தெடுப்பது சவாலான காரியம் ஆகும். இப்படியான நிலைமையை தான் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்திருக்கிறார் ருமேஸ்யா கெல்கி.
துருக்கி நாட்டைச் சேர்ந்த ருமேஸ்யா கெல்கி தான் சமகாலத்தில் வாழும் பெண்களிலேயே மிகவும் உயரமானவர். 7 அடி 07 அங்குலம் உயரம் கொண்ட இவருக்கு உலகின் மிக உயரமான பெண்மணி என கின்னஸ் அமைப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சான்றிதழை வழங்கியது.
தனது உயரம் காரணமாக விமான பயணத்தை தவிர்த்துவந்த அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது துருக்கியை சேர்ந்த விமான நிறுவனம் ஒன்று. ருமேஸ்யா கெல்கி சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் செய்திருக்கிறார். இதற்காக விமானத்தில் மாற்றம் செய்து ஆறு இருக்கைகள் இருந்த இடத்தில் படுக்கை ஒன்றை அமைத்து ருமேசா கெல்கியை விமானத்தில் பயணம் செய்ய வைத்திருக்கிறது அந்த விமான நிறுவனம். விமானத்தில் ஏறியவுடன் பணியாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர். தனது முதல் விமான பயணத்தை சாத்தியமாக்கிய அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாக கெல்கி நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
13 மணி நேர பயணத்தை கடந்து அமெரிக்காவில் கால்பதித்திருக்கும் ருமேஸ்யா கெல்கி அங்கே ஐடி நிறுவனத்தில் பணிபுரிய இருக்கிறார். இதற்காகவே இந்த பயணத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,"ஆரம்பம் முதல் முடிவு வரை எவ்வித குறைவும் இல்லாத பயணமாக இது அமைந்தது. இது எனது முதல் விமான பயணம், ஆனால், இது நிச்சயமாக கடைசி விமானப் பயணமாக இருக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு இன்னல்களுக்கு இடையே தன்னுடைய லட்சியத்தை துரத்தி அமெரிக்கா வரை சென்றிருக்கும் ருமேஸ்யா கெல்கியின் இந்த பதிவு பலரையும் நெகிழ வைத்துவிட்டது என்றே சொல்லவேண்டும். இந்நிலையில், நெட்டிசன்கள் அவருடைய முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வருவதுடன் பணியில் சேர இருக்கும் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
மற்ற செய்திகள்