உலகத்தின் பவர்ஃபுல் பாஸ்போர்ட்களின் List.. இத மட்டும் வச்சிருந்தா 193 நாட்டுக்கு விசாவே எடுக்க வேண்டாமாம்.. இந்தியாவின் ரேங்க் என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்உலக அளவில் மிகவும் வலிமையான பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிரிட்டனை சேர்ந்த பிரபல ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம்.
ஒவ்வொரு நாடும் தங்களது குடிமக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட்களை வழங்கி வருகிறது. இதில் சில நாடுகளின் பாஸ்போர்ட்கள் உலக அளவில் வலிமையானதாக கருதப்படுகிறது. இத்தகைய பாஸ்போர்ட்களை கொண்டிருக்கும் மக்கள் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு முன்கூட்டியே விசா எடுக்காமல் பயணிக்கலாம். கொரோனா காரணமாக விமான போக்குவரத்து ஸ்தம்பித்திருந்த நிலையில், தற்போது நிலைமை சீராகி வருகிறது. பல நாடுகள் பயணிகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.
முதலிடத்தில் ஜப்பான்
இந்நிலையில் பிரிட்டனை சேர்ந்த குடியேற்ற ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் வலிமையான பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் பகுப்பாய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில், இந்த பட்டியலில் ஜப்பான் முதல் இடத்தில இருக்கிறது. ஜப்பான் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் மக்கள் முன்கூட்டியே எடுக்கப்பட்ட விசா இல்லாமலேயே 193 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனம். பட்டியலில் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா 2 ஆம் இடத்தில் இருக்கிறது. இந்த பாஸ்போர்ட்கள் மூலமாக விசா எடுக்காமேலேயே 192 நாடுகளுக்கு பயணிக்கலாம்.
3 வது இடத்தில் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி (190 நாடுகள்), 4 ஆம் இடத்தில் பின்லாந்து மற்றும் இத்தாலி (189 நாடுகள்), 5 ஆம் இடத்தில் ஆஸ்திரியா மற்றும் டென்மார்க் (188 நாடுகள்) ஆகிய நாடுகள் இருக்கின்றன. 187 நாடுகளுடன் ஐக்கிய ராஜ்ஜியம் ஆறாவது இடத்திலும், 7 வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் பாஸ்போஸ்ட் கொண்டு 186 நாடுகளுக்கு விசா எடுக்காமல் பயணிக்க முடியும் என பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா
உலகின் வலிமையான பாஸ்போர்ட்களின் பட்டியலில் இந்தியா 87 வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்திய பாஸ்போர்ட்டை கொண்டிருப்பவர்கள் முன்கூட்டியே விசா எடுக்காமல் 60 நாடுகளுக்கு பயணிக்கலாம் என அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல, பட்டியலில் கடைசி இடம் பிடித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். அந்நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 27 நாடுகளுக்கு முன்கூட்டிய விசா எடுக்காமல் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்