'ரமலான் நோன்பு நேரத்தில்'... 'இதெல்லாத்தையும் கடைப்பிடிங்க’... ‘உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வேகமாக பரவி வருவதால், ரமலான் நோன்புக் காலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவுறுத்தல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ரமலான் மாதம் வரும் 24-ம் தேதி தொடங்கி மே 23-ம் தேதிவரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பைக் கடைப்பிடித்துத் தொழுகை செய்வது வழக்கம். இதுபோன்ற காலங்களில் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடுவார்கள். ஆனால் தற்போது கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் ஊரடங்கு அமலில் உள்ளதால், நோன்புக் காலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சில அறிவுறுத்தல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ரமலான் வழிகாட்டு நெறிமுறையில், சமூக மற்றும் மத நடவடிக்கைகளுக்கான ஒன்று கூடுதலை முற்றிலுமாகத் தடை செய்வது அவசியமானது எனத் தெரிவித்திருக்கிறது. மேலும், இது தொடர்பான முக்கிய முடிவுகளை அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களே எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும், ஒன்று கூடுதல் தடை செய்யப்படும் பட்சத்தில், மத செயல்பாடுகளைத் தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்கள் மூலமாக அனைவரையும் சென்றடைய வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ஒருவேளை அரசாங்கங்களால் மதச் செயல்பாடுகளுக்காக ஒன்று கூடுதல் அனுமதிக்கப்பட்டால், கொரோனா தொற்று வேகமாகப் பரவக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் நாடுகளில் பின்பற்ற வேண்டிய சில அறிவுறுத்தல்களையும் உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது. அவை,
1. மக்கள் கொண்டாட்டங்களுக்கான பொருள்கள் வாங்கச் சந்தைகளில் ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
2. ஒருவருக்கொருவர் இடைவெளி என்பது கட்டாயம் ஒரு மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.
3. நேரடி முறையில் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளாமல் மாற்று வழிகளில் அவற்றை மேற்கொள்ள வேண்டும்.
4. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் எவ்விதக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளாது தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதில் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் அவர்களும் பொதுக் கூட்டங்களைத் தவிர்ப்பது நல்லது.
5. ரமலான் நோன்பு தொடர்பான கூட்டங்களை இயன்ற அளவு திறந்தவெளியில் நடத்த அறிவுறுத்துவதோடு, மூடிய வெளியில் நடைபெறும் பட்சத்தில் நல்ல காற்றோட்டம் உள்ள இடமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
6. நிகழ்வுகளில் பங்குபெறுவோர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு, நிகழ்வின்போது அமர அல்லது நிற்க நிலையான ஓர் இடத்தை ஒருவருக்கு ஒதுக்குவதுடன், பிறருடன் தொடர்பில் இல்லாதவாறு இருக்க வழிவகை செய்ய வேண்டும்.
7. ரமலான் தொடர்பான தொழுகைகள் மற்றும் கூட்டங்களில் பங்கு கொள்வோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் முழு விவரங்களையும் உரிய அமைப்புகள் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், கலந்து கொள்வோரின் முழு பயணக் குறிப்புகளைப் பெறுவதோடு, ஏற்கெனவே நோய் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களா எனக் கான்டாக்ட் ட்ரேஸிங் செய்ய வேண்டும்.
8. தொழுகைக்கு முன்னதாகக் கலந்துகொள்ளும் அனைவரும் சுகாதாரமான முறையில் 70% ஆல்கஹால் கொண்ட சானிடைஸர்களை பயன்படுத்திக் கை கழுவுவதைக் கட்டாயமாக்க வேண்டும். மேலும், தொழுகைக்கு விரிக்கப்பட்டிருக்கும் கார்பெட்டுகளின் மீது, கலந்து கொள்வோர் தங்களுக்குச் சொந்தமான விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.
10. இதனிடையே, நிகழ்விடத்தில் கட்டாயம் சமூக விலகல் தொடர்பான அறிவுறுத்தல்கள், கை கழுவுதலின் நன்மைகள் மற்றும் கொரோனா தொடர்பான பொதுவான கருத்துகளைக் காட்சிப்படுத்த வேண்டும்.
11. பொது மக்கள் கூடித் தொழுகை நடத்தும் இடங்களைத் தொடர்ச்சியான முறையில் சுத்தம் செய்து டிடெர்ஜென்ட் அல்லது கிருமிநாசினிகளைக் கொண்டு கழுவ வேண்டும். மேலும், கதவுப்பிடிகள், மின்சார ஸ்விட்ச்கள், படிக்கட்டுகள் ஆகியவற்றையும் சுழற்சி முறையில் சுத்தம் செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.