ஒட்டுமொத்த 'பாதிப்பு' 140 கோடி... உலகை அதிரவைத்த 'பன்றிக்காய்ச்சலின்' போது 'ஊரடங்கு' அமல்படுத்தப்படாதது ஏன்?
முகப்பு > செய்திகள் > உலகம்நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் பெரிதும் திணறி வருகின்றன. 2 லட்சம் பேர் இறந்தும் இதுவரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால், தற்போது உலக நாடுகள் அனைத்தும் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு ஆகியவற்றை கடைப்பிடித்து கொரோனா சங்கிலியை உடைத்தெறிய முயற்சி செய்து வருகின்றன.
ஆனால் இதற்கு முன் உலகத்தை அதிரவைத்த பன்றிக் காய்ச்சலின் போது ஊரடங்கு ஏன் பின்பற்றப்படவில்லை? என்பதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து கீழே விரிவாக காணலாம்:-
அமெரிக்காவில் தோன்றிய பன்றிக்காய்ச்சல் தீவிரமாக நீடித்த காலம் 2009 ஏப்ரல் 12-ந் தேதி முதல் 2010 ஏப்ரல் 10-ந் தேதி வரை. பாதிக்கப்பட்ட உலக நாடுகள் 117. பாதிக்கப்பட்டோர் 140 கோடி. பலி எண்ணிக்கை 1.5 லட்சம். அதிகபட்ச உயிரிழப்பு மதிப்பீடு 5.75 லட்சம். அமெரிக்காவில் மட்டும் பலியானவர்கள் 12,469. இந்தியாவில் உயிரிழப்பு 833. 2009-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி பன்றிக் காய்ச்சலை பெருந்தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
தற்போதைய புதிய கொரோனா வைரஸ் போல மின்னல் வேகத்தில் உடலுக்குள் ஊடுருவி அமைதியாக 14 நாட்கள் அடைகாத்து மனித உயிர்களை குடிக்கவில்லை. பன்றிக் காய்ச்சல் மெல்ல மெல்ல சீராக பரவி முதல் 5 மாதங்களுக்கு பின்பே அதிக மனிதர்களை கொன்றது. இதனால் மருத்துவ உலகம் விழிப்படைந்து பன்றிக் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. எனவேதான் உலகம் முழுவதும் 140 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது.
பரவும் வேகம் மெதுவாக இருந்தது, உயிர்ப்பலி குறைவாக இருந்தது போன்ற காரணங்களால் தான் உலகை உலுக்கிய சார்ஸ், எபோலா, மெர்ஸ், பன்றிக்காய்ச்சல் ஆகியவற்றின் போது ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. (மெக்சிகோ மட்டும் 2009 ஏப்ரல் 30-ந் தேதி முதல் மே 5-ந் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியது) பன்றிக் காய்ச்சலை விட புதிய கொரோனா வைரஸ் 10 மடங்கு வேகத்தில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டு உள்ளது.
சீனா போல மூடி மறைக்காமல் இந்த நோயின் தன்மையை பாதிப்பு ஏற்பட்ட 11 நாட்களில் அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்ததால் உலக நாடுகள் விழிப்படைந்து தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கின. இதற்கான தடுப்பு மருந்துகளும் 2009-ம் ஆண்டின் நவம்பர் மாதம் தயாராகி விட்டது. இதனால் தான் அந்த காலகட்டத்தின் போது ஊரடங்கு, சமூக இடைவெளி ஆகியவை பின்பற்றப்படவில்லை என்பதே உண்மை.