'4 நாட்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!!'... 'வைரஸ் தீவிரமடையுது... அத ஒழிக்க ஒரே வழி தான் இருக்கு!'... உலக சுகாதார அமைப்பு காட்டம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளில் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 3,75,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16,359 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2,57,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து எச்சரித்தள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் உலக அளவில் முதல் 1 லட்சம் பேருக்கு பரவ 67 நாட்களை எடுத்துக்கொண்டது. அதைத்தொடர்ந்து, அடுத்த 11 நாட்களில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக அதிகரித்தது.
ஆனால், தற்போது வெறும் 4 நாட்களில் மேலும் 1 லட்சம் பேருக்கும் (மொத்தம் 3 லட்சம்) வைரஸ் பரவியுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
நாம் ஒன்றும் உதவியற்ற பார்வையாளர்கள் அல்ல. நாம் இந்த தொற்றுநோயின் பாதையை மாற்றலாம்.
மக்களை வீட்டில் இருக்க சொல்வதும் உடல் அளவில் ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருப்பதும் வைரஸ் பரவுவதை குறைக்கும். ஆனால் இவை அனைத்தும் தடுப்பு நடவடிக்கைகளே தவிர இந்த வைரசை வீழ்த்தி வெற்றியடைவதற்கான வழிமுறை அல்ல.
இதில் வெற்றியடைய வேண்டுமானால் குறிவைக்கப்பட்ட இலக்குகளையும், யுக்திகளையும் கொண்டு நாம் இந்த வைரசை மிகவும் ஆக்ரோஷமாக தாக்க வேண்டும்.
சந்தேகத்திற்குரிய அனைவரையும் பரிசோதனை செய்யுங்கள், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு அக்கறை செலுத்துங்கள்.
பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் உடனடியாக கண்டறிந்து அவர்களையும் தனிமைபடுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.