Russia-Ukraine War: ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்.. சுக்குநூறாய் நொறுங்கிய உலகின் மிகப்பெரிய விமானம் 'மிரியா'..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் நாட்டில் 5 வது நாளாக போர் தொடரும் நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷ்ய தாக்குதல்கள் குறித்து முக்கிய தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்தார்.

Russia-Ukraine War: ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல்.. சுக்குநூறாய் நொறுங்கிய உலகின் மிகப்பெரிய விமானம் 'மிரியா'..

ரஷ்யாவுக்கு எதிராக தனியாக போரிட்டு வரும் உக்ரைனுக்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருகின்றன. அந்த வரிசையில், ஜெர்மனி 1000 பீரங்கி எதிர்ப்பு ஆயுதத்தையும், 500 ஸ்டிங்கர் வகையான நிலத்திலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையையும் அனுப்பி வைத்திருப்பதாக அறிவித்தது. அதேபோல், ஆஸ்திரேலியாவும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான சண்டையில், உக்ரைன் மக்களும் வீரத்துடன் களமிறங்கி இருக்கின்றனர். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், ராணுவத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் ஆயுதங்களுடன் போர் களத்துக்கு புறப்பட்டுள்ளனர். துப்பாக்கிகளை சுடுவதற்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ரஷ்ய படை வீரர்கள்

தலைநகர் கீவ்வை பிடிக்கும் ரஷ்ய படையின் முயற்சிக்கு பதிலடி தாக்குதல் கொடுத்து, உக்ரைன் வீரர்கள் போரிட்டு வருகின்றனர். இவர்களின் தாக்குதலில் ரஷ்யா இதுவரையில் 4,500 வீரர்களை இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் 140 டாங்கிகளையும் உக்ரைன் வீரர்கள்  தகர்த்துள்ளனர். இது தவிர, 5 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. 450க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள், தங்களிடம் கைதிகளாக சிக்கி இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அரசு கோரிக்கை

மேலும், உக்ரைன் ராணுவத்தால் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்கள் சாலைகள், திறந்தவெளி மைதானங்களில் சிதறி கிடக்கின்றன. போர் ஒப்பந்தங்களின்படி இந்த சடலங்களை எடுத்துச் சென்று ரஷ்ய அரசிடம் ஒப்படைக்கும்படி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை உக்ரைன் அரசு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் அருகே ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய விமானம்

தலைநகர் கீவ் நகர் அருகே உள்ள விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலகிலேயே மிகப் பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் அழித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இருப்பினும், உக்ரைன் கண்டிப்பாக இந்த விமானத்தை மீண்டும் கட்டியெழுப்பும் என்றும் அவர் தெரிவித்தார். உலகிலேயே மிகப் பெரிய விமானமான AN-225 'Mriya' உக்ரைன் ஏரோநாட்டிக்கல் நிறுவனமான அன்டோனோவ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 'மிரியா' என்றால் உக்ரைன் மொழியில் 'கனவு' என்று பொருள். இந்த விமானம் கடந்த 1985ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. 30 சக்கரங்கள், 6 இன்ஜின்கள், 290 அடி இறக்கைகளுடன் தயாரிக்கப்பட்டதாகும்.  இது உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் என்ற சிறப்பை பெற்றது. சரக்கை ஏற்றுக் கொண்ட இந்த விமானத்தால் 4,500 கிமீ வரை செல்ல முடியும்.

அமைச்சர் டிமிட்ரோ குலேபா தகவல்

கீவ் நகருக்கு வெளியே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் இந்த விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்த விமானம் முற்றிலும் எரிந்து சாம்பலானதாக அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ரஷ்யா எங்களது மிகப் பெரிய விமானத்தை அழித்தாலும். அவர்களால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய நாடு என்ற எங்கள் கனவை அழிக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.  இதனைத்தொடர்ந்து உக்ரைன் அரசும், "நாங்கள் நிச்சயம் அந்த விமானத்தை மீண்டும் உருவாக்குவோம். வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் என்ற கனவை நிச்சயம் அடைவோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

MRIYA, UKRAINE RUSSIA WAR, UKRAINE GOVT

மற்ற செய்திகள்