'வல்லரசு' நாடுகளே 'திணறும்' வேளையில்... மக்களில் 'ஒருவரை' கூட இழக்காமல்... கொரோனாவைக் 'கட்டுப்படுத்திய' நாடு!... எப்படி சாத்தியமானது?...
முகப்பு > செய்திகள் > உலகம்தெற்காசிய நாடான வியட்நாம் கொரோனாவை சிறப்பாக கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் வேளையில் வியட்நாம் கொரோனாவை சிறப்பாக கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், 9.7 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நாடான வியட்நாம் கொரோனா பாதிப்பால் இதுவரை நாட்டு மக்களில் ஒருவரைக் கூட இழக்காத சாதனையைப் புரிந்துள்ளது. மேலும் அங்கு 270 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 222 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மற்ற தெற்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகியவை ஊரடங்கை நீட்டித்துக் கொண்டிருக்க, வியட்நாம் மட்டும் மூன்று மாவட்டங்களைத் தவிர பிற பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தியுள்ளது. சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துள்ள வியட்நாம் ஏற்கெனவே சார்ஸ் உட்பட பல தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியதுமே அந்நாட்டு அரசின் செயல்பாடுகளை தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் எல்லைகளை மூடிய வியட்நாம் முதல்முதலாக ஜனவரி மாத இறுதியில் கொரோனா பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இதையடுத்து பிப்ரவரி தொடக்கம் முதலே வெளிநாடுகளில் இருந்து வியட்நாம் வந்தவர்கள் விமான நிலையங்களில் முழு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் பரிசோதனைகளை தீவிரப்படுத்துதல், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல், தொற்று குறித்த தகவல்களை மறைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை என அந்நாடு அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. நகரங்கள், கிராமங்கள் என சுவரொட்டிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மூலமாக கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் மிக விரைவாக கொண்டு சென்றுள்ளது.
கொரோனா பாதித்தவரை உடனடியாக அடையாளம் கண்டு தனிமைப்படுத்திய வியட்நாம் மருத்துவப் பரிசோதனைக் கருவிகளுக்கு வெளிநாடுகளை நம்பி இருக்காமல் மார்ச் தொடக்கத்திலேயே அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் தொடங்கியுள்ளது. சுமார் 90 நிமிடங்களில் முடிவைக் கூறும் மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அந்நாட்டுக்கு பெரிதும் உதவியுள்ளன. அத்துடன் கடுமையான ஊரடங்கும், அதை முறையாகப் பின்பற்றிய மக்களும் அங்கு கொரோனா கட்டுக்குள் வந்ததற்கான மிக முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. முன்னதாக அமெரிக்காவுடனான போரில் பேரழிவைச் சந்தித்துள்ள வியட்நாம் தங்கள் மீது போர் தொடுத்த அமெரிக்காவுக்கும் லட்சக்கணக்கான மருத்துவ ஆடைகளை ஏற்றுமதி செய்து உதவியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.