'கண்ணுல கனவு... சாதிக்கணும்னு வெறி'!.. தாலிபான்கள் கண்ணில் மண்ணைத் தூவி... ஆப்கான் சிறுமிகளை போராடி மீட்ட அமெரிக்க தாய்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடம் இருந்து 10 பெண்களை அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் காப்பாற்றிய த்ரில் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டை சேர்ந்த பெண்களின் பாதுகாப்பு பற்றி உலகமே கவலைப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் 16 முதல் 18 வயது வரை உள்ள 10 இளம் பெண்களை காப்பாற்றியிருக்கிறார், 60 வயதான அல்லிசன் ரெனோ (Allyson Reneau) என்ற அமெரிக்கப் பெண்மணி. 11 குழந்தைகளின் தாயான இவருக்கு 9 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆப்கன் பெண்கள் ரோபாட்டிக்ஸ் குழுவின் 10 உறுப்பினர்களை மீட்ட இந்த அமெரிக்க பெண்ணை தற்போது உலகமே சூப்பர் ஹீரோவாக பார்க்கிறது. தாலிபான்கள் நாட்டின் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு பிரபலமான பெண் ரோபோடிக்ஸ் குழுவைச் சேர்ந்த 10 பேரை மீட்டுள்ளார், இந்த பெண். அதுமட்டுமின்றி, அவர்களை காபூலில் இருந்து வேறொரு பாதுகாப்பான இடத்திற்கும் மாற்றியுள்ளார்.
ஹார்வர்ட் பட்டதாரியான ரெனோ, ஆப்கானிஸ்தானில் பதற்றம் அதிகரித்தபோது, அங்குள்ள பெண்களின் நல்வாழ்வு குறித்து கவலைப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னதாக, 2019 ஹியூமன் டு மார்ஸ் மாநாட்டில் ரோபாட்டிக்ஸ் குழுவினரை சந்தித்த ரெனோ, தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தார்.
கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் தனது தோழியின் உதவியுடன் 10 சிறுமிகளையும், குழந்தைகளையும் வெளியேற்றுவதற்கு தேவையான ஆவணப் பணிகளை செய்துக் கொடுத்தார். பிறகு கத்தார் அரசு ஒரு விமானத்தை அனுப்பி சிறுமிகளை வெளியே அனுப்பியது.
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தாலிபன்களின் கிளர்ச்சி நடவடிக்கைகளில் அவர்களின் முன்னேற்றமும், அந்நாட்டு ராணுவத்தின் பின்னடவையும் பார்த்த ரெனோ, சிறுமிகள் ஆபத்தில் உள்ளனர் என்று புரிந்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, எப்படியாவது அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் தனது தோழியை தொடர்புகொண்டு தேவையான ஆவணங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். ரெனோவின் தோழியின் உதவியுடன் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து, ஆப்கன் பெண்களை பத்திரமாக காபூலில் இருந்து வெளியேற்றும் செயல்முறையைத் தொடங்கினார்.
இறுதியாக, தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியதும், 10 பெண்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏறி வெற்றிகரமாக நாட்டை விட்டு வெளியேறினார்கள். இப்போது நாட்டில் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கும் அந்தச் சிறுமிகள் அங்கிருந்து தங்கள் கல்வியைத் தொடரவுள்ளனர்.
"இந்நிலையில், அவர்கள் அனைவரின் பாஸ்போர்ட்டுகளையும் வாங்கிக் கொண்டு, நள்ளிரவில் தூதரகத்திற்குச் சென்று, இரவு முழுவதும் வேலை செய்து, பெண்களை நாட்டை விட்டு அழைத்துச் செல்வதற்கான ஆவணங்கள் மற்றும் முன்னேற்பாடுகளை எனது தோழி தயாரித்தாள்" என்று ரெனோ கூறினார். இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரெனோ, ஆனால் இரண்டாவது குழு பெண்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
தற்போது, அனைவரின் உதவியுடன் ரோபோடிக்ஸ் அணியில் உள்ள 25 சிறுமிகளையும், அவர்களின் வழிகாட்டிகளையும் வெளியேற்றும் நடைமுறையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். "ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து பெண்கள் ஆப்கானிஸ்தான் ரோபாட்டிக்ஸ் குழுவின் பல உறுப்பினர்கள் பாதுகாப்பாக வந்துள்ளனர்" என்று டிஜிட்டல் சிட்டிசன் ஃபண்ட் மற்றும் கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஆப்கானிஸ்தான் பெண்கள் ரோபோடிக் குழு பற்றி கூறியது.
மேலும், "நான் பொதுவாக உதவி கேட்க விரும்புவதில்லை, ஆனால் தயவுசெய்து இந்த ஆப்கான் பெண்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நான் அதிகம் சொல்ல முடியாது. ஆனால் அவர்களுக்கு இப்போது ஏதாவது ஒரு அதிசயம் நடக்கவேண்டும்" என்று அந்தப் பதிவில் கேட்டுக் கொண்டார் ரெனோ.
மற்ற செய்திகள்