அமெரிக்காவில் பரபரப்பு!.. 'மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுறோம்னு'... தேர்தல் நேரத்தில் டிரம்புக்கு புதிய சிக்கல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதாக கூறி நிதி வசூல் செய்து மோசடி நடைபெற்றுள்ளது. இதில் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பேனன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் பரபரப்பு!.. 'மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுறோம்னு'... தேர்தல் நேரத்தில் டிரம்புக்கு புதிய சிக்கல்!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பேனன் (வயது 66) ஆவார்.

இவர், கடந்த 2016 தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற தூணாக திகழ்ந்தவர். அது மட்டுமல்ல, உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா 2017-ம் ஆண்டு விலக முடிவு எடுத்ததில், இவர் முக்கிய பங்கு வகித்தார்.

இவர் டிரம்பின் கனவு திட்டமான அமெரிக்கா-மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டும் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் செய்து வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.

இவரும், இவரது 3 கூட்டாளிகளும் "நாங்கள் சுவர் கட்டுகிறோம்" என்ற திட்டத்தை அறிவித்து, இதற்காக பல்லாயிரக்கணக்கான டாலர்களை நன்கொடையாளர்களிடம் இருந்து வசூல் செய்தனர். இதில் மொத்தம் 25 மில்லியன் டாலர் (சுமார் ரூ.187 கோடி) சேர்ந்ததாக தெரிகிறது.

இதில் ஸ்டீவ் பேனன் தன் சொந்த செலவுகளுக்கு 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7½ கோடி) நிதியை பயன்படுத்தி உள்ளார்.

இந்த ஊழல் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து அவர் கனெக்டிகட் மாகாணத்தில் 'லேடி மே' என்ற படகில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த படகு சீன கோடீசுவரர் குவோ வெங்குய்க்கு உரியது என தகவல்கள் கூறுகின்றன.

முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் ஸ்டீவ் பேனன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடத்தப்படும்.

இந்த வழக்கில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் பேனன் மீதான குற்றச்சாட்டு குறித்து நியூயார்க் தெற்கு மாவட்ட அரசு வக்கீல் ஆட்ரி ஸ்டிராஸ் கூறுகையில், "ஸ்டீவ் பேனன், பிரையன் கோல்பேஜ், ஆண்ட்ரூ படோலட்டோ மற்றும் திமோத்தி ஷியா ஆகியோர் நூற்றுக்கணக்கான நன்கொடையாளர்களை மோசடி செய்துள்ளனர். எல்லைச்சுவர் கட்டுவதில் அவர்களது ஆர்வத்தை பயன்படுத்தி, இந்த திட்டத்தில் திரட்டப்படும் நிதி அப்படியே சுவர் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் என கூறி ஏமாற்றி மில்லியன்கணக்கான டாலர்களை திரட்டி உள்ளனர்" என குறிப்பிட்டார்.

நியூயார்க் தெற்கு மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் பார்ட்லெட் கூறுகையில், "4 பேரும் சேர்ந்து நன்கொடைகளை மூடி மறைக்கவும், மோசடி விலைப்பட்டியல் மற்றும் கணக்குகளையும் உருவாக்கி உள்ளனர். இந்த வழக்கு மற்ற மோசடிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும். சட்டத்துக்கு மேலாக யாரும் கிடையாது" என கூறினார்.

ஸ்டீவ் பேனன் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், "இதை மிக மோசமாக உணர்கிறேன். இந்த திட்டத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த திட்டம் அரசின் திட்டம், இது தனி நபர்களுக்கு உரியது அல்ல" என குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும், இதற்கான நிதி மெக்சிகோவிடம் பெறப்படும் என்று கடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டபோது டிரம்ப் வாக்குறுதி அளித்ததும், ஆனால் அதற்கான நிதியை தர மெக்சிகோ மறுத்து விட்டதும், பின்னர் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ராணுவ நிதியை சுவர் கட்டுவதற்காக டிரம்ப் பெற்றதும், பணிகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்